வானிலை ஆராய்ச்சி கணிப்புகள் இல்லாத காலத்திலே சுற்றி இருக்கும் இயற்கையின் மாறுதலை வைத்துத்தான் மழை, புயல் வருவதை நம் முன்னோர்கள் யூகித்திருக்கிறார்கள்.
இயற்கையின் மாற்றங்களை பறவைகளும் இதர உயிரினங் களும்கூட உணர்த்துகின்றன. புயல், வெள்ளம், பூகம்பத்தை அவைகள் எப்படி உணர்த்தும் தெரியுமா? பறவைகள் பறக்கும் உயரத்தைவைத்து காலநிலையை கணிக்கலாம். உயரமாக அவை பறந்துகொண்டிருந்தால், பருவநிலை இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். பறவைகள் தாழ்வாக பறந்தாலோ அல்லது பறக்கவே இல்லை என்றாலோ மழையோ அல்லது புயலோ வரப்போகிறது என்று அர்த்தம். சிட்டுக் குருவிகள் மண்ணில் விளையாடினால் மழை வரப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சேவல் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை தவிர்த்து வேறு நேரத்தில் தொடர்ந்து கூவுவது மழை வரப்போவதின் அறிகுறி. மைனா, தண்ணீரில் புரண்டு விளையாடினால் மழை நிச்சயம் உண்டு.
இரவில்தான் எப்போதும் ஆந்தைகள் அலறும். வழக்கத்திற்கு மாறாக பகலில் வித்தியாசமாக அலறினால் அந்தப் பகுதியில் புயல், சூறாவளி போன்ற ஏதாவது ஒன்று ஏற்படப்போகிறது என்று உணர்ந்துகொள்ளலாம். வவ்வால்கள் அதிக உயரத்தில் வெகு நேரம் பறந்துக் கொண்டிருந்தால் அடுத்த நாள் மழை வரக்கூடும். மழை, புயல் வரப் போவதற்கு முன்பு பாம்புகள் அதனுடைய
வளையிலிருந்து வெளியே வந்துவிடும். தவளை மழை வரப்போவதை மற்ற தவளைகளுக்கு தெரியப்படுத்தி, அவைகளை பத்திரமாக இருக்கச் சொல்ல தொடர்ந்து கூச்சலிடும்.
புயல் வருவதற்கு முன்பு காற்றழுத்தம் குறையும். இதை புரிந்து கொள்ளும் பசுக்கள் தரையில் படுத்துக்கொள்ளும். சில சமயம் பசுவும், ஆடும் ஒன்றாக ஒரே இடத்தில் அருகருகே நின்றுகொண்டு பாதுகாப்பை எதிர்பார்க்கும். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அதன் அர்த்தத்தை உணர்ந்துகொண்டு செயல்படுவார்கள்.
புயல், மழை வருவதற்கு முன்பாக கிளிகள் மரத்தில் கூடு கட்டும். அதற்கு தேவையான குச்சிகளை அவசரஅவசரமாக பொறுக்கிச்செல்லும். வீட்டின் சுவற்றில் பல்லிகள் தொற்றிக் கொண்டிருந்தால் மழை வராது. ஒன்றுகூட கண்ணில் படாமல் ஓடி ஒளிந்துகொண்டிருந்தால் மழை வரும் என்று பொருள்.
நிலவு எப்போதும் கொஞ்சம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில்தான் தென்படும். காற்று மண்டலத்தில் தூசுக்கள் அதிகம் சேர்ந்திருப்பதுதான் அதற்கு காரணம். காற்று மண்டலத்தின் அழுத்தம் மாறுபடும் போது அந்த தூசுகள் நீங்கி நிலவு பளிச்சென்றிருக்கும். அதுவும் மழை வருவதற்கான அறிகுறியே. சில நேரங்களில் நிலவைச் சுற்றி ஒரு வளையம் போல தோன்றும். அது ஓரிரு நாளில் மழை வரும் என்பதை சுட்டிக்காட்டும்.
பூகம்பம் வருவதை பறவைகள், விலங்குகள் நன்கு அறியும். பறவைகள் தன் இருப்பிடத்தைவிட்டு திறந்தவெளி மைதானத்திற்கு போய் ஒன்றுகூடிவிடும். 2004-ம் ஆண்டு சுனாமி வருவதற்கு முன்பு கடற்பறவைகள் பறந்து போய் உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தது. அந்த நேரம் மிருகங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று அடைக்கலம் புகுந்தன. பல வீடுகளில் இருந்த வளர்ப்பு பிராணிகளும் வெளியே ஓடி வந்தன. சங்கிலியால் கட்டப்பட்டிருந்த யானைகள் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடின. விலங்குகளின் இந்த வித்தியாச நடவடிக்கைக்கு பிறகுதான் பயங்கரமான சுனாமி வந்தது.
Comments
Post a Comment