கருத்து வேறுபாடுகள் இல்லாத தம்பதிகள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சண்டை போடாத தம்பதிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
ஏன் என்றால் இப்போது கருத்து வேறுபாடுகள் என்ற எல்லையைக் கடந்து, சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கணவனும், மனைவியும் தங்களையும், தங்கள் பிரச்சினைகளையும், சூழ்நிலைகளையும் நன்றாகப் புரிந்துகொண்டால் அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் குறைந்து போய்விடும்.
தம்பதிகளிடையே சண்டை தொடங்குவதற்கு முதல் காரணமாக இருப்பது, மன அழுத்தம். கணவருக்கு அலுவலகப் பணியில் ஏதாவது மனஅழுத்தம் இருக்கலாம். அல்லது வெளி இடத்தில் அவருக்கு ஏற்படும் பிரச்சினையால் மனச்சுமையோடு வீட்டிற்கு வரலாம்.
அவர் தன் மனஅழுத்தத்தை சொல்லிலோ, செயலிலோ மனைவியிடம் காட்டும்போது, அவரும் குடும்ப சூழ்நிலையாலோ-வேலைப்பளுவாலோ மனஅழுத்தத்தோடு இருந்தால், “உங்களுக்கு மட்டும் தானா, எனக்கும் மன அழுத்தம் இருக்கிறது. சும்மா அலுவலகத்தில் இருந்து வந்ததும் எரிந்துவிழும் வேலையை என்னிடம் வைத்துக் கொள்ளவேண்டாம்’’ என்பார். இது மட்டும் போதும் அன்றைய சண்டைக்கு.
இன்றைய சூழ்நிலையில் எல்லா இடத்திலும் பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் மன அழுத்தம் ஏற்படத்தான் செய்யும். கணவருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை மனைவியும், மனைவிக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கண வரும் புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி, நடந்துகொண்டால் அங்கே சண்டையை உருவாக்க வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
இன்றைய இயந்திர உலகில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதை லாவகமாக கையாண்டு நம்மை பாதிக்காத அளவிற்கு இயல்பாக கொண்டுச் செல்லத் தெரியவேண்டும். யாருடைய கட்டுப்பாட்டிற்குள் யார் இருப்பது என்ற எண்ணம் இருவரிடமுமே ஏற்படக்கூடாது. அப்படி நினைத்தால் அந்த குடும்பத்திற்குள் அடக்குமுறை தலைதூக்கிவிடும். உடனே அங்கு நிம்மதி குறைந்து சண்டை, சச்சரவு தோன்றிவிடும். தம்பதிகளில் யாருமே ஒருவரை ஒருவர் அடக்கி ஆள நினைக்காமல், சுதந்திரமாக செயல்படுவதற்கு இருவருமே அனுமதிக்க வேண்டும். சுதந்திரம் இருக்கும் போது அங்கு மரியாதை, அன்பு, ஆதரவு எல்லாமுமே வந்துவிடும்.
பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட எதிர்பார்ப்புகள் காரணமாக இருக்கின்றன. கணவன் மனைவியிடம் மிக அதிகமாக எதிர்பார்ப்பதும், மனைவி, கணவரிடம் அதிகமாக எதிர்பார்ப்பதும் இப்போது அன்றாட நிகழ்வாகிவிட்டது. எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பெரும்பாலும் அதிகமான அளவு பணம் தேவைப்படும். பணம் பற்றாக்குறையாக இருக்கும்போது எதிர்பார்ப்புகள் ஈடேறாமல் போய்விடும். அதனால் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு தக்கபடி எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளவேண்டும். துணையும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
Comments
Post a Comment