இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டிய தேவை உலகளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் ஆம்பி ஜென்சன் சுற்றுப் புறத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை விரைவாக குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
உணவுப் பொட்டலங்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக புற்களைக் கொண்டு சுற்றுச்சூழல் மாசில்லாத கவர்களை தயாரிக்கும் முயற்சியில் டென்மார்க் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலகளவில் சுற்றுச்சூழல் மாசு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தொழிற்சாலை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆண்டுதோறும் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றால் ஓசோன் மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மண் வளம், நிலத்தடி நீர்வளம் சரிந்து வருகிறது. இதில் இருந்து விடுபடுவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக டென்மார்க்கைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புற்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த கவர்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நார்களை பிரித்தெடுத்து, அதனுடன் மக்கும் தன்மையுடைய அல்லது இயற்கைக்கு உகந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தி புதிய கவர்களை தயாரிக்க உள்ளனர்.
டென்மார்க்கில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கவர்கள் உணவுப் பொட்டலங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், இது அந்த நாட்டின் இயற்கை சூழலை மிக்கபெரிய அளவில் பாதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 8 கிலோ டன் புற்கள் மற்றும் 10 கிலோ டன் மட்கும் தன்மையுடைய பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய கவர்கள், 210 கிலோ டன் பிளாஸ்டிக் மூலம் வெளியேறும் கார்பன் டை ஆக்சைட்டை குறைக்கும் என அவர்கள் கணித்துள்ளனர்.
SinProPack என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். வர்த்தக ரீதியாகவும், சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் விதமாகவும் தங்களுடைய ஆய்வின் வெற்றி இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டேனிஷ் சுற்றுப்புறச்சூழல் அமைப்பு இந்த ஆய்வுக்காக 440,000 யூரோக்களை நிதியாக வழங்கியுள்ளது. அந்த அமைப்பின் Green Development and Demonstration என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் SinProPack ஆய்வு 2023 ஆம் ஆண்டுக்குள் முழுமை பெறும் என கூறப்பட்டுள்ளது.
ஆனி கிறிஸ்டின் (Anne Christine) என்பவர் இந்த ஆய்வு குறித்து பேசும்போது, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்படும் இந்த கவர்கள், புற்கள் மற்றும் நார் பொருட்களை கொண்டு உருவாக்கப்படுவதாக தெரிவித்தார். இயற்கை வளம் மிக்க பகுதிகளில் வீசப்பட்டால் கூட இந்த கவர்கள் விரைவாக மக்கிவிடும் என தெரிவித்த அவர், சுற்றுப் புறத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என விளக்கம் அளித்துள்ளார்.
இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டிய தேவை உலகளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் ஆம்பி ஜென்சன் (Ambye-Jensen), மறு சுழற்சி உகந்த வகையில் அல்லது சுற்றுப் புறத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை விரைவாக குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment