சுவையிலும், சத்து மிகுதியிலும் பப்பாளிப் பழத்திற்கு தனி இடம் உண்டு.எளிதில் ஜீரணமாகும், மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும். பப்பாளியின் அறிவியல் பெயர் ‘காரிகா பப்பாயா’. அதிகபட்சம் 20 அங்குல நீளமும், 12 அங்குல அகலமும் விளையக் கூடியது. இதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்…
மிகக் குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது பப்பாளி. 100 கிராம் பழத்தில் 39 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. பப்பாளியில் கொழுப்புச்சத்து கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் ஏராளம் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட பப்பாளியில் ‘வைட்டமின் சி’ அதிக அளவில் காணப்படுகிறது. 100 கிராம் பழத்தில் 61.8 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ உள்ளது. இது ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் கிடைப்பதைவிட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
பப்பாளிப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, மிகுதியான அளவில் உள்ளது. தோல் வளவளப்புத் தன்மையுடன் இருக்கவும், பார்வைத் திறனுக்கும் ‘வைட்டமின் ஏ’ அவசியம். புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும்.
போலிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலுக்கு புத்துணர்ச்சி வழங்கும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும்.
புத்துணர்ச்சி மிக்க பப்பாளியில், அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புத் தன்மையுடன் விளங்க பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் இது உதவி புரிகிறது. பப்பாளி விதைகள் ஒட்டுண்ணிகளுக்கு எதிராகவும், வலியை குறைப்பதிலும் பயன்படுகிறது. வயிற்றுவலி, படர்தாமரை ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கனிந்த பழங்களை தோல் மற்றும் விதை நீக்கி சாப்பிடலாம். கூடுதல் சுவைக்கு எலுமிச்சை சாறு தெளித்து சுவைத்தால் தனி ருசியாக இருக்கும். பழச்சாலட்டுகளில் பப்பாளி முக்கிய இடம் பிடிக்கிறது. பப்பாளி ஜூஸ் பிரபலமான ஜூஸ் வகையாகும். ஐஸ்கிரீம், குளிர்பானம், பழக்கலவை தயாரிப்பதிலும் பப்பாளி பழம் பயன்படுகிறது. முதிர்ந்த பப்பாளிக் காய், ஆசிய நாடுகளில் காய்கறிபோல சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
கோழிக்கறி மற்றும் கடல் உணவுகளில் சேர்க்கப்படும் பப்பாளி, உணவுக்கு தனி சுவை வழங்குகிறது.
Comments
Post a Comment