அனந்தய்யாவின் மூலிகை மருந்தை வாங்குவதற்காக கடந்த வாரம் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா பாதித்தவர்கள் அந்த கிராமத்தில் குவிந்ததனர்,
ஆந்திராவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் இலவசமாக தயாரித்து வழங்கிய மூலிகை மருந்து கொரோனாவை குணப்படுத்தியதாக கூறி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. தற்போது அரசின் ஆய்வில் உள்ள இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என்பது உறுதியானால் ஆந்திர அரசு இந்த மருந்தை அதிகாரப்பூர்வமாக வழங்கிட முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கிருஷ்ணாபட்டினம் கிராமம், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் போனிகி அனந்தய்யா. இவர் ஆயுர்வேத மருந்துகள், லேகியம் தயாரித்து உள்ளூர் அளவில் பிரபலமாக திகழ்ந்த நிலையில் சில மூலிகைகளை கொண்டு இவர் தயாரித்த மருந்து, கொரோனாவை உடனடியாக குணப்படுத்துகிறது என செய்திகள் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில் குவிந்தனர்.
அனந்தய்யாவின் மருந்தை வாங்க குவிந்த கூட்டம்
அனந்தய்யா தயாரித்த கண் சொட்டு மருந்தை போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். மேலும் மருத்துவர் அனந்தய்யா தயாரித்து வழங்கிய மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்தனர். அனந்தய்யாவின் மருந்தை போட்டுக்கொண்ட ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த தீவிர தொற்றாளர்கள் உடனடியாக குணமடைந்து பேசத்தொடங்கியதாகவும் தகவல்கள் உள்ளன.
கடந்த வாரம் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா பாதித்தவர்கள் அங்கு குவிந்ததனர், சுமார் 5 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது, மேலும் கொரோனா பரவும் சூழலும் ஏற்பட்டதால் நிலைமையை சமாளிக்க காவல்துறையினர் வந்தனர்.
இந்த விவகாரம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சென்றதையடுத்து அனந்தய்ய தயாரித்துள்ள மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என்ற உண்மையை ஆய்வு செய்து தெரிவிக்குமாறு ஐசிஎம்ஆர் குழுவினரை கேட்டுக்கொண்டார். மேலும் அந்த ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை மருந்து விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் முதல்வர் ஜெகன் உத்தரவிட்டார்.
இதற்கிடையே மருத்துவர் அனந்தய்யாவை பாதுகாப்பான இடத்துக்கு அரசின் கட்டுப்பாட்டில் தங்கவைத்தனர்.
அனந்தய்யாவின் மருந்தை மாநில அரசு தடை செய்யக்கூடாது என சிலர் ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் முறையிட்டனர். அவருடைய மருந்தின் ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும் எனவும், மருந்துக்கான ஒப்புதல் குறித்து வரும் திங்கட்கிழமை ஆந்திர அரசு முடிவு எடுக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் அனுமதி கிடைத்தால் முழு வீச்சில் மருந்து தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவேன் என்று ஆயுர்வேத மருத்துவர் அனந்தய்யா முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment