தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
லட்சங்களில் பணத்தை செலவிட்டு ஆர்ப்பாட்டமாக நடந்த மணவிழாக்களுக்கு கொரோனா முடிவுகட்டியதால், காலத்திற்கு ஏற்றபடி ‘கலர்புல்லாக’ திருமணங்களை நடத்த அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஆடம்பர விருந்து, கொண்டாட் டங்களை தவிர்த்து குறைந்த அளவு விருந்தினர்களோடு திருமணங்களை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் மணப்பெண்கள் இப்போதும் அழகிலும், அலங்காரத்திலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அவர்கள் அணியும் முக கவசமும் தங்களுக்கு கூடுதல் அழகு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அது அவர்கள் முகத்தை பிரகாசிக்கவைக்கிறது. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை அதி அற்புதமான அழகைக் கொண்டிருக்கின்றன. முத்துகள், தொங்கல்கள், எம்ப்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளும் மாஸ்குகளில் இடம்பெறுகின்றன. பூக்கள் மற்றும் விதவிதமான டிசைன்களை கொண்டும் மாஸ்குகள் கவர்ச்சியாக்கப்படுகின்றன.
அழகான மாஸ்குகள் மணப்பெண்களின் அழகுக் கவலையை குறைத்திருக்கின்றன. மாஸ்குகள் மூலம் தங்கள் முக அழகை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையும் மணப்பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சில மணப்பெண்களின் உதடு அல்லது மூக்கு அவர்கள் விரும்பும் அழகுடன் காட்சியளிக்காது. அந்த பகுதிகளின் அழகை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி ‘கரெக்டிவ் மேக்கப்’ போடுவார்கள். அப்படிப்பட்ட மணப்பெண்கள் இந்த கவர்ச்சி மாஸ்குகள் அணிவதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளை மறைத்து, மாஸ்குகள் அவர்கள் கூடுதல் அழகுடன் காட்சியளிக்க துணைபுரிகின்றன.
மணப்பெண்களின் அலங்கார மாஸ்குகள் முதலில் வடஇந்தியாவில்தான் பிரபலமானது. இப்போது தமிழகத்தில் உள்ள பெருநகர பெண்களால் அதிகம் விரும்பி வாங்கி அணியப்படுகிறது. அவர்கள் திருமண உடைகள், ஆபரணங்கள் வாங்கும்போதே அதற்கு பொருத்தமான மாஸ்குகளையும் வாங்கிவிடுகிறார்கள். மணநாளுக்கு முன்பே அவைகளை எல்லாம் அணிந்து ஒத்திகையும் பார்த்துக்கொள்கிறார்கள்.
மாஸ்க் அணிவதால் மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். புருவத்தை சீராக்கி, கண்களுக்கு கவர்ச்சியை கூட்டுகிறார்கள். அதோடு முந்தைய காலங்களில் அவர்கள் மறந்து போயிருந்த நெற்றிச்சுட்டி, மாட்டி போன்றவைகளையும் இப்போது அணிந்துகூடுதல் அழகுடன் வலம் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது குறைந்த அளவு விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைவருமே ஒரே மாதிரி உடை அணிவதும், அதற்கு ஏற்றபடி ஒரே மாதிரியான முக கவசத்தோடு தோன்றுவதும் இப்போது புதிய டிரெண்ட்டாக இருந்துகொண்டிருக்கிறது.
Comments
Post a Comment