லண்டன், இங்கிலாந்து நாட்டின் தலைநகரம். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம். கலை, இலக்கியம், பொருளாதாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது.
பலப்பல இனம், பண்பாடு, மொழி ஆகியன பேசும் மக்கள் சுமார் ஒன்றரைக் கோடிபேர் லண்டனில் வாழ்கிறார்கள். அதனால் லண்டன் கிட்டத்தட்ட பல நூறு மொழிகளைப் பேசக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
லண்டனை சுற்றி பல மலைகள் சூழ்ந்துள்ளன. லண்டன் நகரத்தை அணைத்தபடியே தென்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் தேம்ஸ் நதி ஓடுகிறது. லண்டனின் பாதாள ரெயில் ஐரோப்பாவில் மிகவும் பழமையானது. நீளமானது.
இதுமட்டுமா..? லண்டனின் பெருமை நீண்டு கொண்டே இருக்கிறது. அதை ஒவ்வொன்றாய் தெரிந்து கொள்வோமா...!
பிக்பென் கடிகாரம் : இது லண்டன் நகரின் அடையாளங்களில் ஒன்று. முதலில் ஸ்டீபன் கோபுரம் என்றே அழைக்கப்பட்டது. இங்கு நிறுவப்பெற்ற பெரிய மணியின் அடையாளமாக இந்தப் பெயர் பெற்றது. இன்றும் பிரிட்டனின் நாடாளுமன்றம் இரவில் நடந்தால் அதைக்குறிக்கும் விதமாகக் கோபுரத்தின் உச்சியில் விளக்கு எரியும்.
லண்டன் கோபுரம் : கி.பி.1070-ல் லண்டன் கோபுரம் எதிரிகளிடமிருந்து நகரத்தைக் காப்பாற்றுவதற்காகக் கட்டப்பட்டது. இதில் இருபது கோபுரங்கள் உள்ளன. அதில் வெள்ளைக் கற்களால் கட்டப்பட்ட வெள்ளைக் கோபுரமும் உள்ளது. இங்கே இங்கிலாந்து அரசர்களின் ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள், இங்கிலாந்து அரசு பல நாடுகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பக்கிங்காம் அரண்மனை : அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் இது. இதன் ஒரு பகுதியில்தான் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் வாழ்கின்றனர். அரசி உள்ளே இருந்தால் இங்குக் கொடி பறக்கும். தினமும் இங்கே நடக்கும் படை வீரர்கள் பணிமாற்றம் நிகழ்ச்சி காண்பதற்கு அழகாக இருக்கும்.
லண்டன் அய் : புதிய நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக ஜூபிளி தோட்டத்தில் லண்டன் விமான நிறுவனம் லண்டன் அய் என்ற ராட்சத ராட்டினத்தை அமைத்துள்ளது. மூவாயிரம் டன் அடித்தளத்தில் ஆயிரத்து எழுநூறு டன் இரும்பினால் அமைக்கப்பட்ட இந்தச் சக்கரம் கட்டிமுடிக்க ஓர் ஆண்டு ஆகியது. இதன் ஒவ்வொரு கூண்டிலும் இருபத்தைந்து பயணியர் அமர்ந்து சக்கரத்தில் சுற்றி வரலாம். ஒருமுறை சுற்றிவர முப்பது நிமிடங்கள் ஆகும். இந்தச் சக்கரத்தில் இருந்து லண்டன் மாநகரம் முழுமையும் கண்டு ரசிக்கலாம்.
பச்சைப் பசும்புல் நகரம் : லண்டனில் நிறைய பச்சைப் பசும்புல் பூங்காக்களும் உள் ளன. அவற்றில் கென்சில்டன் பூங்கா, பச்சைப் பூங்கா, ஜேம்ஸ் பூங்கா, ஹைடே பூங்கா ஆகியன முக்கியமானவை. இதில், முந்நூற்று அறுபது ஏக்கரில் அமைந்துள்ள ஹைடே பூங்கா குறிப்பிடத்தக்கது. நிற்பவர்கள், நடப்பவர்கள், ஓடுபவர்கள், நீந்துபவர்கள், குதிரை ஏற்றம் செய்பவர்கள், படகுச் சவாரி செய்பவர்கள் ஆகியோர் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் பூங்கா இது. இதைச் சுற்றியே பல பூங்காக்களும் அமைந்துள்ளன.
அரசர் பாதை : ஹைடே பூங்காவின் தெற்கு மூலையில் அமைந்து உள்ளது ராட்டன் ரோ. அரசர் பாதை என்று பொருள்படக்கூடியது. அரசர்கள் முன்னர் நடைபயின்றதால் இப்பெயர். இங்கே ‘புகழ்பெற்ற பேச்சாளர்களின் மூலை’ என்ற இடமும் உள்ளது. இங்கே பொதுமக்கள் அரசியல், சமயம், பொருளாதாரம், இலக்கியம் என்று எதைப்பற்றியும் பேசலாம்.
கோபுரப் பாலம் : லண்டன் நகரின் அடையாளங்களில் ஒன்று, நாற்பத்து மூன்று மீட்டர் உயரமான மாபெரும் இரண்டு கோபுரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கோபுரப் பாலம். இப்பாலம் சுமார் 200 அடி நீளமுள்ளது. பெரிய கப்பல்கள் கடக்க வேண்டிய சமயத்தில் உயர்த்தத்தக்கது.
மேடம் துசாட்ஸ் : இது ஓர் மெழுகுப் பொம்மை அருங்காட்சியகம். உலக பிரபலங்கள் பலரின் மெழுகு பொம்மைகள் இங்கே தத்ரூபமாக உருவாக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்கள், போராளிகள், பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள்... என பலர் இங்கே மெழுகு பொம்மைகளாக நிற்கிறார்கள்.
Comments
Post a Comment