சா்ஃப்போர்டு எனப்படும் அலை மிதவைப் படகையில் பயணிப்பது போல், முதலை ஒன்றின் மேல் பயணிக்கும் இளைஞரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலேயாவில் ஒரு புகைப்படக் கலைஞர் முதலையின் கழுத்தில் கயிறு கட்டி அதனை பிடித்துக்கொண்டு சர்ஃப்போர்டில் பயணிப்பது போல பயணிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியது. இந்த புகைப்படம் முதலில் ரெட்டிட் இணையதளம் வெளியிட்டிருந்தது. ஆனால் அதனை பயன்படுத்தும் இணையதளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அதனை ரெட்டிட் தளம் நீக்கியது. இருப்பினும் ஒரு சில ரெட்டிட் பயன்படுத்துபவர்களால் அந்த புகைப்படம் வைரலாகியது.
இதனை பகிரும் பலரும் உயிரினங்கள் துன்புறுத்தப்படுவது குறித்து கடுமையாக சாடினர். ஒரு சிலர் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். துயரம் என்னவென்றால் ஒரு சிலர் இளைஞரின் சாகசத்தை புகழ்ந்து எழுதி வருகின்றனர். ஒரு வகையில் இந்த மாதிரி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும்போது அதனை தூண்டுகோலாக எடுத்துக்கொண்டு மேலும் சிலர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
இந்த மாதிரி சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் நடப்பது முதன் முறையல்ல. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன. இது ஆஸ்திரேலியாவில் உயிரினங்களின் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுகின்றன. வெளியில் தெரிந்தே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு பிரச்சனைகள் நடைபெறுகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கபுரியாக ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதி கருதப்படுகிறது. இங்கு புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. இதுவரை அங்கு 80 சதவிகித பவளப்பாறைகள் நிறமாறியிருக்கின்றன. ஏற்கெனவே, 40 சதவிகிதப் பாறைகள் மோசமான மற்றும் மிக மோசமான நிலையில்தான் இருந்துவருகின்றன. ஆகவே, மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ள இந்த நிறமாற்றத்திலிருந்து அவை உயிர் பிழைப்பது எளிய காரியமல்ல.
பவளப்பாறைகள் அழிந்தால் அந்த கடற்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்கிறார்கள் அறிவியலாளர்கள். மேலும், கடற்பரப்பிலும் கரிம வாயு அதிகளவில் கலந்துகொண்டிருக்கிறது. இதனால் நீரின் சமநிலை பாதிக்கப்பட்டு அதில் வாழும் உயிரினங்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வியல் பாதிக்கும் சூழ்நிலையில் உள்ளது.
அதனை சரிசெய்யும் முயற்சியில் ஆஸ்திரேலியா தற்போது ஈடுபட்டு வருகிறது. இப்படியான சூழ்நிலையில் அங்கே உயிரினங்கள் நடத்தப்படும் விதம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. பெரும்பாலானோர் சாகசத்திற்காக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தண்டனைகள் கடுமையாக்கி இதுபோன்ற தவறுகள் இனி நேராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு கடல்வாழ் உயிரினங்களின் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
also read :
Comments
Post a Comment