பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்!
பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம்.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார்.
சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா?
வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா...
அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டலங்களும் விற்றுத் தீர்ந்துவிடும். பிரியாணியின் விலையோ மற்ற கடைகளில் 80ரூபாய்க்கு மேலே விற்பனையாக சப்ரினா கடையில் மட்டும் 20 ரூபாய் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும். இது விஷயமல்ல.
மாறாக கடந்த 4 நாட்களாக சப்ரினா வைத்திருந்து அறிவிப்புப் பலகை தான் வைரல். அந்த அறிவிப்பு பார்ப்போரையும், செய்தியை படிக்கும் நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அந்த அறிவிப்பு பலகையில் அவர்,
’பசிக்குதா எடுத்துக்குங்க...’ என்று எழுதி வைத்துள்ளார். தாயுள்ளம் படைத்த அந்த சொற்கள் காண்போரை கலங்கச் செய்கிறது.
அதாவது ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்காக இப்படி எழுதி இருக்கிறார். அதை பார்த்ததும், ஏழைப் பிள்ளைகள் காசின்றி, இலவசமாகவே பிரியாணி பொட்டலங்களை எடுத்து சென்று சாப்பிட்டு பசியாறுகிறார்கள்.
காசு இருந்தால் பிரியாணி ரூ.20. காசில்லை பசிக்கிறது என்றால் இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். எத்தனை பெரிய உள்ளம் அது!
சப்ரினாவின் இந்த செயல், கோவையையே திரும்பி பார்க்க வைத்துவிட்டது. ஒரு பிரியாணி எப்படியும் இப்போது 70, 80 ரூபாய்க்கு மேல் ஹோட்டல்களில் விற்கப்படுகிறது. அதை 20 ரூபாய்க்கு சப்ரினா தருவதே பெரிய விஷயம், அதிலும் இலவச பிரியாணியை ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும், தருவது என்பது அதைவிட பெரிய விஷயம்..
இது குறித்து சப்ரினா கூறுகையில்,
“இந்த 3 மாசமாக பிரியாணி விற்று வருகிறோம். 20 ரூபாய்க்கூட தர முடியாதவர்களுக்கு இலவசமாகவே சாப்பாடு தருகிறோம்,” என்கிறார்.
கோவையில் வசித்து வரும் சப்ரினா - சதீஷ் தம்பதியரின் சொந்த ஊர் சென்னை. 2 குழந்தைகளுடன் கோவையில் வாழ்ந்து வருகிறார்கள்.
மூன்று மாதமாக இந்த பிரியாணி கடை நடத்தி வந்தாலும் இலவச பிரியாணி திட்டம் கடந்த 4 நாட்களாக செயல்பட்டு வருகிறது.
விலை இல்லாமல் உணவு வழங்க பணக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கொடுக்க வேண்டும் என்று மனம் இருந்தால் போதும் என பெருமிதத்துடன் சொல்கிறார்.
சப்ரினாவின் கடைக்கு ஏழைகள் திரண்டு சென்று பசியாற்றி கொள்கிறார்கள்!
Comments
Post a Comment