கொவிட்-19 இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவிற்காக, சிங்கப்பூரில் உள்ள பல அமைப்புகள் பணமாகவும் பொருளாகவும் பல மில்லியன் வெள்ளி மதிப்பிலான உதவியைத் திரட்டி இருக்கின்றன.
இந்திய மேலாண்மை நிறுவனங்களின் முன்னாள் மாணவர் சங்கம் (பிஐஐஎம்ஏ), இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கிய #BreatheLifeIntoIndia எனும் நிதித்திரட்டு நடவடிக்கை மூலம் இதுவரை $5.4 மில்லியனைத் திரட்டி இருக்கிறது.
அம்முயற்சி மூலம் கிடைத்த $2.4 மில்லியன் ரொக்கம், 2,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்பட உள்ளது. எஞ்சிய $3 மில்லியனும் பொருளுதவியாக வந்துள்ளது.
இந்திய மேலாண்மை நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் பலர் $1.6 மில்லியனைப் பணமாக நன்கொடை வழங்கினர். அச்சங்கம் அணுகிய பெருநிறுவனங்கள் மூலம் எஞ்சிய $800,000 நிதி திரட்டப்பட்டது.
விநியோகிப்பாளர்களை அடையாளம் கண்டு மருத்துவப் பொருள்களை வாங்குதல், பேரம் பேசி விலையைக் குறைத்தல், ஆக்சிஜன் உருளைகள், செறிவூட்டிகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் எனப் பல வழிகளிலும் அச்சங்கம் உதவிக்கரம் நீட்டியது.
“சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இந்தியாவிற்கு மருத்துவச் சாதனங்களை விநியோகிப்பதை முடுக்கிவிட இந்த ஒத்துழைப்பு உதவி வருகிறது. நிதி திரட்டியதோடு நில்லாது, சிங்கப்பூர் ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் குழு மதிப்புமிக்க பல வழிகளிலும் கைகொடுத்து வருகிறது. இந்த ஒத்துழைப்பிற்காக நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்,” என்றார் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாகியும் தலைமைச் செயலாளருமான திரு பெஞ்சமின் வில்லியம்.
‘பிஐஐஎம்ஏ’ மூலம் கிடைத்த ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் பயனாளிகளுக்குக் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
நம்பகமான விநியோகிப்பாளர்களை அடையாளம் கண்டு, பணிப்புகளை (orders) முன்வைக்கவும் தளவாடப் பணிகளை மேற்கொள்ளவும் தரச் சோதனைகளைச் செய்யவும் இறுதிநிலை வரை விநியோகப் பணிகளை ஒழுங்குபடுத்தவும் தனது தொண்டூழிய ஆதரவுக் குழு, பல நாடுகளிலும் உள்ள ஐஐஎம் முன்னாள் மாணவர் சங்கங்களுடன் தனது தொண்டூழிய ஆதரவுக் குழு இணைந்து செயல்பட்டதாக ‘பிஐஎம்எம்ஏ’ கூறியது.
சிங்கப்பூரிலும் மலேசியா, சீனா, தைவான், துருக்கி போன்ற நாடுகளிலும் விநியோக நிறுவனங்களை அந்த மாணவர் சங்கக் கட்டமைப்பு ஏற்பாடு செய்தது.
“பணமாகவும் கட்டமைப்பு வழியாகவும் உதவி செய்ததுடன், இந்த இக்கட்டான சூழலில் தங்களது விலைமதிக்க முடியாத நேரத்தையும் ‘பிஐஐஎம்ஏ சிங்கப்பூர்’ உறுப்பினர்கள் செலவிட்டனர்,” என்றார் சங்கத்தின் தலைவர் திரு சுரேஷ் சங்கர்.
இந்தியாவிற்காக நிதி திரட்ட வேறு பல நிறுவனங்களும் உதவி இருக்கின்றன.
‘இண்டஸ் ஆன்ட்ரபிரனர்ஸ் (டிஐஇ) சிங்கப்பூர்’ அமைப்பு 2.2 மில்லியன் அமெரிக்க டாலரை (S$2.93 மி.) திரட்டியுள்ளது. சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையும் (சிக்கி) லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் (லிஷா) முன்னெடுத்த நிதித்திரட்டு நடவடிக்கைக்கு சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை $50,000 நன்கொடை வழங்கியிருக்கிறது.
‘பிஐஐஎம்ஏ’ நிதித்திரட்டு நடவடிக்கை அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நீடிக்கும். விருப்பம் உள்ளோர் https://www.giving.sg/campaigns/piima_breathe_life_into_india எனும் இணையப்பக்கம் வழியாக நன்கொடை தரலாம்.
Comments
Post a Comment