டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரத்தை செலவிட்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேலை அல்லது பொழுதுபோக்கு நோக்கத்திற்காக நிறைய பேர் மடிக்கணினியை நீண்ட நேரம் உபயோகிக்கிறார்கள். கணினி முன்பு அமர்ந்து மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டுவிடுகிறார்கள். அப்படி நீண்ட நேரம் டிஜிட்டல் சாதனங்கள் முன்பு உட்கார்ந்திருப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிப்புள்ளாக்கும். வேறு சில பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி, சோர்வு போன்ற பாதிப்புகள் உண்டாகும். குறிப்பிட்ட இடத்தில் நீண்ட நேரமாக ஒரே மாதிரியாக உட்கார்ந்திருப்பது உடல் தோற்றத்தின் நிலையிலும் மாற்றத்தை உருவாக்கும். அதாவது ஒருபக்கமாக சாய்ந்தே உட்கார்ந்து பழகிவிட்டால், எல்லா நேரங்களிலும் அவர்களை அறியாமலே அப்படியே உட்கார பழகிவிடுவார்கள்.
ஒரே நிலையில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் அந்த பகுதி தசைகள் இறுக்கமாகிவிடும். அந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படலாம். இதனை தடுக்க வேண்டுமானால் முதுகுப்பகுதி வளையாத அளவுக்கு நாற்காலி அமைப்பு இருக்கவேண்டும். கண் மட்டத்திற்கு இணையாகவோ அல்லது அதற்கு சற்று கீழாகவோ கணினியை வைத்திருக்கவேண்டும். கீபோர்டு, முழங்கைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்கு வசதியான நிலையில் இருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக கணினி, லேப்டாப்பை பார்த்துக்கொண்டிருக்கும்போது கண்களுக்கு அழுத்தம் ஏற்படும். திரை தூரத்தில் இருந்தாலும் கூட கண்களுக்கு சோர்வு ஏற்பட்டு அழுத்தம் உண்டாவது தவிர்க்கமுடியாதது. இதனை தடுக்க அறையில் இருக்கும் விளக்கு வெளிச்சம் நேரடியாக கண்களில் பிரதிபலிக்கக்கூடாது. கணினி திரையை சற்று சாய்வாக வைத்திருக்க வேண்டும். திரையின் வெளிச்ச அளவையும் குறைத்து வைக்க வேண்டும். அடிக்கடி திரையில் இருந்து கண்களை விலக்கி வேறு பக்கம் பார்க்க வேண்டும். மங்கலான பார்வை, தலைவலி இருந்தால் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும்.
கணினி திரையில் நீண்ட நேரம் செலவிடுவதும்போது தூங்கும் நேரம் குறைந்துவிடும். திரையிலிருந்து வெளிவரும் நீல நிற ஒளியானது மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் இரவில் தூங்குவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினை தலைதூக்கும். இதனை தடுக்க இரவு நேரத்தில் லேப்டாப் முன் அமர்ந்து வேலை செய்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அப்படி வேலை செய்வதாக இருந்தால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை சில வினாடிகள் மூடி, திறக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் வேண்டும்.
லேப்டாப் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்தால் டைப்-2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் போன்றவை ஏற்படும் சூழல் அதிகரிக்கும். டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரத்தை செலவிட்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்த ஓட்டத்தில் கொழுப்பும் சேரக்கூடும். இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். கணினியில் அதிக நேரத்தை செலவிடுகிறவர்கள் துரித உணவு, கொழுப்பு உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். சத்தான பழங்களை சாப்பிடலாம்.
லேப்டாப் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்வது மூளையின் சிந்தனை செயல்முறை கட்டமைப்பை மாற்றக்கூடும். மூளையின் சமிக்ஞைகளை பலவீனப்படுத்தி அறிவாற்றல் செயல்முறையை பாதிக்கக்கூடும். அதனால் நினைவாற்றல் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க கண்களுக்கு பயிற்சி கொடுக்கவேண்டும். தியானமும் செய்யலாம்.
Comments
Post a Comment