நெடு, நெடுவென வளர்ந்த அமெரிக்க குடும்பம் ஒன்று, உலகிலேயே மிகவும் உயரமான குடும்பம் என கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உயரமாக இருப்பது என்பது சாதாரணமான விஷயம் தான், ஆனால் உலக சாதனையை உருவாக்கும் அளவுக்கு உயரமாக இருப்பது என்பதும், அதுவும் ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றிணைந்து இப்படியொரு சாதனையை படைப்பது என்பதும் மிகவும் வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கும். அப்படிப்பட்ட உலக சாதனையைத் தான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பேமிலி செய்து அசத்தியுள்ளது.
ட்ராப் குடும்பம், அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள எஸ்கோ பகுதியில் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில் அப்பா ஸ்காட், அம்மா கிறிஸ்ஸி, மகள்கள் சவன்னா மற்றும் மோலி, மகன் ஆடம் என ஐந்து பேர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பம் தான் பலராலும் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனையை படைத்துள்ளது.
ஏனென்றால் இவர்கள் குடும்பத்தின் ஓவர் ஆல் உயரம் ஒரு சராசரி டென்னிஸ் மைதானத்தின் நீளத்திற்கு சமமாகும். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ட்ராப்ஸ் குடும்பத்தினர் சராசரியாக 203.29 சென்டி மீட்டர், அதாவது 6 அடி 8.03 அங்குல உயரத்துடன் ட்ராப் குடும்பம் உலகிலேயே மிகவும் உயரமான குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டது.
கின்னஸ் நிருபர் அலிசியாமேரி ரோட்ரிகஸின் கூற்றுப்படி, ட்ராப் குடும்பத்திலேயே மிகவும் இளையவரான 22 வயது இளைஞர் ஆடம் ட்ராப் 221.71 செமீ அல்லது (7 அடி 3 அங்குலம்), மோலி (24) 197.26 செமீ (6 அடி 6 அங்குலம்), சவன்னா (27), 203.6 செமீ (22 அங்குலம்), தாயார் கிறிஸி (6 அடி 3 அங்குலம்), தந்தை ஸ்காட்டின் உயரம் 202.7 செமீ (6 அடி 8 அங்குலம்) எனத் தெரிவித்துள்ளார். இந்த உயரம் ட்ராப் குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளுக்கும் விளையாட்டு துறையில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.
ஆடம், சவன்னா, மோலி ஆகிய மூவரும் கல்லூரிகளில் கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ராப் குடும்பத்தின் உயரத்தைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "உயரமான குடும்பம் - 203.29 செ.மீ (6 அடி. 8.03 அங்குலம்) என்ற கேப்ஷன் உடன் உலக சாதனை தொடர்பான சில ஹேஷ்டேக்குகளுடன் இந்த வீடியோவை கின்னஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் ஒட்டுமொத்த குடும்பமும் ஸ்டைலாக நின்றபடியே வீட்டின் மேற்கூரையை கைகளால் தொட்டுக்கொண்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட நிலையில், இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த அதிசய குடும்பத்தை கண்டு வியந்துள்ளனர். உயரத்தை வைத்தே ஒட்டுமொத்த குடும்பம் உலக சாதனை படைத்ததற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment