தாடி வளர்க்கும்போது சூரியனிடம் இருந்துவரும் கதிர்வீச்சுகள் நேரடியாக சருமத்தை பாதிக்காது என்பதால் இளமையான தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
காதலில் தோல்வி அடைபவர்கள்தான் தாடி வளர்ப்பார்கள் என்ற நிலை இப்போது இல்லை. ஸ்டைலுக்காக தாடி வளர்ப்பவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். தாடியை முறையாக பராமரித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். புற்று நோயை தடுக்கும் தன்மை தாடிக்கு உண்டு என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் முகத்தை நேரடியாக தாக்காதவாறு தாடி பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. அதனால் தாடி வளர்ப்பவர்களுக்கு சரும புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மையும் தாடிக்கு உண்டு. ஏனெனில் தாடி வளர்க்கும்போது சூரியனிடம் இருந்துவரும் கதிர்வீச்சுகள் நேரடியாக சருமத்தை பாதிக்காது என்பதால் இளமையான தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். அதாவது தாடியுடன் பார்க்கும்போது வயது அதிகரித்திருப்பது போல் தோன்றும். ஆனால் சருமமோ இளமையுடன் மிளிரும்.
மழைக்காலம் தாடி வளர்ப்புக்கு ஏதுவானது. தாடி எந்த அளவுக்கு அடர்த்தியாக உள்ளதோ அந்த அளவுக்கு குளிருக்கு இதமளிக்கும். குளிரை கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. மழைக்கால நோய் பாதிப்புகளில் இருந்தும் தாடி பாதுகாப்பு வழங்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
தாடி வளர்ப்பவர்களை விட ‘ஷேவிங்’ செய்து பளிச்சென்ற தோற்றத்துடன் காணப்படுபவர்கள் மழைக்காலத்தில் சரும நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு ஆளாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஷேவிங் செய்யும்போது கவனமாக செயல்படாவிட்டால் வெட்டுக்காயங்கள் ஏற்படக்கூடும். பருக்கள், சரும அரிப்பு போன்ற பிரச்சினைகளும் சிலருக்கு உருவாகும். ஆனால் தாடி வளர்ப்பவர்கள் அதனை முறையாக பராமரித்தால் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை.
சருமம் ஈரப்பதமாக இருந்தால்தான் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். சரும அழகை தக்கவைத்துக்கொள்வதற்கு உலர்வடையாமல் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் தாடி வளர்ப்பவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படாது. தாடி வளர்க்கும்போது இயற்கையாகவே ஈரப்பதம் படர்ந்திருக்கும்.
சருமம் உலர்வடைவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் சரும பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதேவேளையில் தாடியை ஸ்டைலாக வளர்ப்பதற்கு ஏற்ப பராமரிப்பும் அமைய வேண்டும். அப்போதுதான் சரும அழகை தாடி பிரதிபலிக்கும்.
Comments
Post a Comment