உடலில் புரதச்சத்து குறைவதன் காரணமாக தசைகள் வலுவிழத்தல், முடி உதிர்வு, சரும பாதிப்பு, ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு, வளர்ச்சியின்மை, தசை வீக்கம், பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
உடல் வளர்ச்சி சீராக இருப்பதற்கு புரதச்சத்து முக்கியமானது. இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், திசுக்களின் வளர்ச்சிக்கும் அவசியமானவை.
ஒவ்வொருவரும் உடல் எடையில், ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தினசரி புரதம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக 50 கிலோ உடல் எடை கொண்ட பெண்ணுக்கு, ஒரு நாளுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு இந்த அளவில் மாற்றம் ஏற்படலாம்.
உடலில் புரதச்சத்து குறைவதன் காரணமாக தசைகள் வலுவிழத்தல், முடி உதிர்வு, சரும பாதிப்பு, ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு, வளர்ச்சியின்மை, தசை வீக்கம், பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
புரதச்சத்து பெரும்பாலும் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. அசைவ உணவுகளை ஒப்பிடும்போது, சைவ உணவுகளில் புரதம் குறைவாகவே உள்ளது. எனவே சைவ உணவை மட்டும் உண்பவர்கள், தினசரி தங்களுக்குத் தேவையான புரதச்சத்தை பெறுவது குறித்து பார்க்கலாம்.
சைவ உணவுகளில் பயிறு மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. 100 கிராம் அளவில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே துவரை, பச்சைப்பயிறு, உளுந்து, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கொள்ளு, கொத்தவரை, அவரை, தட்டைப்பயறு, பச்சைப்பட்டாணி, சோயா, பாதாம், பூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
கீரை வகைகளில் பசலைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.
மேலும் புரோக்கோலி, காளான், சோளம், கேழ்வரகு, முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றிலும், பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பன்னீர் போன்றவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
எளிதாக கிடைக்கும் சுண்டல், வேர்க்கடலை உருண்டை, உடைத்த கடலை உருண்டை, பால், தயிர் போன்றவற்றை பெண்கள் தவறாமல் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
Comments
Post a Comment