நீச்சல் குளத்தில் செய்யப்படும் உடற்பயிற்சி தான் ஹைட்ரோதெரபி. குளத்தின் ஆழம் தோள்களுக்கும் இடுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது போன்று மேற்கொள்ளப்படும்.
இன்றைய பரபரப்பான சூழல், மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் நம்மை நோயாளியாக மாற்றுவதற்கு ஒரு காரணியாக அமைகின்றன. அதில் முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் ஒன்று தான் மூட்டு வலி. முன்பெல்லாம் வயதான காலத்தில் தான் மூட்டு வலிப்பிரச்சனையால் பாதிக்கப்படுவோம். ஆனால் இன்றைக்கு இளம் தலைமுறையினர் உள்பட பெண்கள் அனைவரும் மூட்டு வலி பிரச்சனைக்கு சிகிச்சை பெற்றுவருவது வாடிக்கையாகிவிட்டது.
தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு என பல்வேறு மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படும் நிலையில், ஹைட்ரோதெரபி எனப்படும் நீர் சிகிச்சை இதற்கு நல்ல தீர்வாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.. அது என்ன நீர் சிகிச்சை? எப்படி மூட்டு வலிக்குத் தீர்வு காண முடியும் என்பது? குறித்து குறித்து இங்கே அறிந்து கொள்வோம்..
ஹைட்ரோதெரபி என்றால் என்ன?
நீச்சல் குளத்தில் செய்யப்படும் உடற்பயிற்சி தான் ஹைட்ரோதெரபி. குளத்தின் ஆழம் தோள்களுக்கும் இடுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது போன்று மேற்கொள்ளப்படும். பின் அந்த நீச்சல் குளத்தில் உடல் , முதுகு என நீர் பாய்ச்சி அடிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் நிபுணர்களும் அவர்களின் தேவைக்கு ஏற்ப பிரஷர் கொடுத்து நீரை பாய்ச்சி அடிப்பார்கள். இப்படி அடிக்கும்போது உடல் வலி, முதுகு வலி குறையும். அதோடு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களும், முதுகுவலி, சொரியாடிக் ஆர்த்ரிடிஸ், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் மற்றும் கீல்வாதம் உள்ளவர்களுக்கும் மேற்கொள்ளலாம். இச்சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் நீரானது 32 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பராமரிக்கப்படுகிறது..
இந்த சிகிச்சையில், நிலத்தை விட நீருக்கடியில் நடப்பதற்கு ஈர்ப்பு இல்லாததால் நோயாளிகளின் தசைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு தசைகள் நல்ல ஊக்கம் பெறுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது..
ஹைட்ரோதெரபி சிகிச்சையினால் ஏற்படும் நன்மைகள்:
* நாள்பட்ட வலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
* இறுக்கமான, பதட்டமான தசைகளை தளர்த்த உதவுகிறது.
* செரிமான செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது.
* கால்களையும் கைகளையும் தண்ணீருக்கு எதிராகத் தள்ளினால், அது தசை வலிமையை மேம்படுத்த உதவுகிறது.
* ஹைட்ரோதெரபி கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸை அதிகரிக்கிறது, இது நல்ல இதய ஆரோக்கியத்திற்கு அவசியம்.
* உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.
மூட்டுவலி அல்லது மூட்டு அசௌகரியம் உள்ளவர்களுக்கு நீர் சிகிச்சை மிகவும் வசதியாக இருக்கும். ஹைட்ரோதெரபி பயிற்சிகளைச் செய்யும்போது, நீங்களே செய்ய முயற்சிக்காமல், நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாக மூட்டு வலி பிரச்சனைகள் உள்ளவர்கள் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற தினசரி உடல் செயல்பாடுகளின் மூலம் உங்களது மூட்டு செயல்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறைக்கலாம். இதோடு மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்படாது. மேலும் அழற்சி மற்றும் கீல்வாதத்துடன் தொடர்புடைய இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்கின்றது ஆய்வுகள். எனவே மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் ஹைட்ரோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளும் அதே சமயத்தில் வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்வதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment