ஜப்பானைச் சேர்ந்த பொறியாளர்கள் ஃபைபர் கேபிள் மூலமான அதிவேக இண்டர்நெட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர்.
கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு போனுக்கு உயிரே இண்டர்நெட்தான். ஒருநாள் இண்டர்நெட் இல்லையென்றாலும் பலரும் பித்துபிடித்துப்போய் அலையும் நிலை உருவாகிவிட்டது. அத்தியாவசிய ஒன்றாகவே ஆகிவிட்ட இண்டர்நெட்டை பயனாளர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வேலையில்தான் இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இறங்கியுள்ளன. 2ஜி என தொடங்கப்பட்ட இண்டர்நெட் வேகம், இப்போது 5ஜி சோதனையில் உள்ளது. குறிப்பாக 4ஜிக்கு பிறகு இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் 5ஜி வந்தால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்தியாவை பொருத்தவரை 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதனை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 4 கோடியை எட்டலாம் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 33 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை 5ஜி சேவை பெற்றிருக்குமாம். 3ஜி மற்றும் 4ஜி சேவைகளில் உயராத மொபைல் பயன்பாடு 5ஜி சேவையில் அதிகரிக்குமாம், அதாவது புதிதாக 43 கோடி மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்குவார்கள் என்கிறது ஒரு ஆய்வு. உலக நாடுகள் இப்படி சென்றுகொண்டிருக்க ஜப்பானோ வேற லெவெல் சம்பவத்தை செய்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பொறியாளர்கள் ஃபைபர் கேபிள் மூலமான அதிவேக இண்டர்நெட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். வேகம் என்றால் மின்னல் வேகம், அதாவது ஒரு நொடிக்கு 319 டெராபைட் வேகம். 5ஜி வந்தாலே ஜிகாபைட் வேகம்தான் கிடைக்கும். ஆனால் ஜப்பானில் கண்டுபிடித்துள்ள இண்டர்நெட் ஒரு நொடிக்கு 319 டெராபைட். இன்னும் எளிதாக புரிய வேண்டுமானால் 1000 ஜிகாபைட் தான் 1 டெராபைட். இப்போது உங்களுக்கு இதன் வேகம் புரியும்.
இந்த வேகத்தை பைபர் கேபிள் மூலம் 3000கிமீ தூரத்திற்கு அனுப்பி சோதனையும் செய்துள்ளனர். தூரம் அதிகம் என்றாலும் இண்டர்நெட் வேகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் பட்டையைக் கிளப்பியுள்ளது இணைய வேகம். இதற்கு முன்பு நொடிக்கு 178 டெராபைட் என்பதே அதிவேக இண்டர்நெட்டாக இருந்தது. முந்தைய சாதனையை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் இப்போது முறியடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்துக்கு புதிய ஃபைபர் கேபிள்கூடத் தேவையில்லையாம், வழக்கமாக வீட்டில் பயன்படுத்தும் ஆப்டிகல் ஃபைபர் கேபிளையே சிறு மாறுதல் செய்து பயன்படுத்தலாம் என அதிர வைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த இண்டர்நெட் வேகம் தொடர்பான செய்தியை கேட்டதும் இணையவாசிகள் நகைச்சுவையாக பல பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர். 4k 3டி படத்தை நொடியில் டவுன்லோட் செய்து மீண்டும் டெலிட் செய்து மீண்டும் டவுன்லோடு செய்யலாம் என்றும், இனி வீடியோ காலில் தெரிகிறதா? என்ற கேள்வியை கேட்கத் தேவையில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
Comments
Post a Comment