இயற்கையுடன் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் வந்திருந்த பெண் மருத்துவர் கற்பாறைகளுக்கு பலியாகியுள்ளார்.
மலையில் இருந்து உருண்டோடிய பாறைகள் சுற்றுலா வாகனத்தில் விழுந்ததில் பெண் மருத்துவர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹிமாச்சல் பிரதேசம் கின்னார் மாவட்டத்தின் சங்கலா பள்ளத்தாக்கில் நேற்று மதியம் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பெரிய அளவிலான பாறைகள் சாலையில் சென்ற சுற்றுலா வாகனங்களின் மீது விழுந்தது. இந்தக்காட்சியை அங்கு சுற்றுலாவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
திடீரென மலையின் மீதிருந்து சத்தம் கேட்கிறது. சிறிது நேரத்தில் மலையில் இருந்து பாறைகள் உருண்டோடி வருகின்றன. ஆபத்தை உணராமல் ஹோட்டல் மாடியில் இருந்து வீடியோ எடுக்கும் சிலர் நெருங்கி வரும் ஆபத்தை உணர்ந்து கூச்சலிடுகின்றனர்.
நிலச்சரிவின் காரணமாக பாறைகள் உருண்டோடியது. அப்போது சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீதும் ராட்சத பாறைகள் விழுந்தது. இதில் சில வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ராட்சத பாறைகள் சுற்றுலா வாகனத்தின் மீது விழுந்த விபத்தில் 9 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்தோ - திபெத் எல்லை போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இணையத்தில் வெளியாகியுள்ள இந்த காட்சி காண்போரை பதறச் செய்கிறது.
இயற்கையுடன் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் வந்திருந்த பெண் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர் ஜெய்ப்பூரை சேர்ந்த தீபா சர்மா என்பது தெரியவந்துள்ளது. இயற்கை மீது தீராத காதல் கொண்ட தீபா ஹிமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலாவுக்கு வந்தார், பல இடங்களை பார்வையிட்டு இறுதியாக நேற்று கின்னார் பகுதிக்கு வந்துள்ளார்.
விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு போஸ்ட் செய்துள்ளார். அதில், பொதுமக்கள் அனுமதிக்கப்படும் இந்தியாவின் கடைசி இடம். இந்த இடத்திற்கு அப்பால் 80 கி.மீ தூரத்திற்கு திபெத்தின் எல்லை உள்ளது. அங்கு தான் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது" என்ற கேப்ஷனுடன் எல்லைப்பகுதியில் எடுத்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேர் டெல்லி மற்றும் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment