முதன்முறையாக ஆன்லைன் வகுப்புகளில் கல்வியை கற்பதால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அல்லது யாரோ ஒருவர் சொல்லிக் கொடுப்பதை கேட்கும் மன நிலை அவர்களுக்கு இல்லை. இதனால், குழந்தைகளுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த இவற்றை செய்யுங்கள்.
இளைமைக் காலத்தில் நண்பர்கள் புடைசூழ பள்ளிக்கு சென்று திரும்புவதே ஒரு பிக்னிக்போல இருக்கும். ஆனால், இப்போது இருக்கும் சூழலில் குழந்தைகள் பள்ளிக்கு நேரடியாக செல்ல முடியாது என்பதால் அவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளில் படிக்க வேண்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் முதன்முறையாக பள்ளி வகுப்புக்குள் நுழைந்த குழந்தைகளுக்கு பள்ளி சூழல் என்றால் என்னவென்றே தெரியாது. இதனால், அவர்களுக்கு படிப்பின் மீதான ஈர்ப்பு, அந்தளவுக்கு இருக்குமா? என்ற பயம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.
முதன்முறையாக ஆன்லைன் வகுப்புகளில் கல்வியை கற்பதால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அல்லது யாரோ ஒருவர் சொல்லிக் கொடுப்பதை கேட்கும் மன நிலை அவர்களுக்கு இல்லை. இதனால் குழந்தைகளுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தை எப்படி ஏற்படுத்துவது? அவர்களை ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க செய்வது எப்படி? என பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர். அவர்களுக்கு இந்த டிப்ஸ் உபயோகமாக இருக்கும்.
தோழமை ஏற்படுத்துதல் : புதிதாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க குழந்தைகளுக்கு விரும்பம் இல்லை என்றால், அவர்களுடன் சக தோழரும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஏற்பாடு செய்யுங்கள். இருவரும் விளையாடிக் கொண்டு, தங்களுக்கு பிடித்தவற்றை பகிர்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பார்கள். சக தோழமை ஒருவர் இருக்கும்போது, மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டு ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தவற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒருவரையொருவர் பார்த்து, அவர்களாகவே ஊக்குவித்துக் கொள்வார்கள். நீங்கள் அருகில் இருந்து இருவரையும் படிக்குமாறு ஊக்கப்படுத்தலாம். உங்களுக்கான பணி சுலபமாக இருக்கும்.
புரிந்து கொள்ளுதல் : குழந்தைகள், நாம் நினைப்பதைவிட வித்தியாசமானவர்கள். அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது பிடிக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயல வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு ஆக்ஷனுக்கு பின்னும் ஒரு விஷயம் இருக்கும். அதனை நீங்கள் சரியாக கண்டுபிடித்துவிட்டால், அவர்களை எளிதாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கச் செய்ய முடியும். அவர்களும் ஆர்வமாக படிக்கத் தொடங்குவார்கள்.
பரிசு பொருட்கள் : ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க விரும்பாத குழந்தைகளுக்கு சில பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தலாம். குறுகிய காலத்துக்கு மட்டுமே இந்த டிரிக் உதவும் என்றாலும் அவர்களை படிப்பில் நுழைப்பதற்கு இந்த சமயோசித்தமான முயற்சி உதவும். அதற்குள் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு மீது அதிக ஈர்ப்பு வருவதற்கான செயல்களை பெற்றோராகிய நீங்கள் கண்டறிந்துவிட வேண்டும்.
நீங்களே நண்பர்கள் : உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே முதல் நண்பராக இருக்க வேண்டும். அவர்களுடன் நீங்கள் உரையாடுவதற்கு பயன்படுத்தும் மொழி நடையே, அவர்கள் உங்களை நண்பர்களாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும். சந்தோஷமாக உரையாடுங்கள். கடினமான சொற்களை பயன்படுத்தவோ அல்லது அதட்டவோ கூடாது. உங்களின் அதட்டல்கள் படிப்பின் மீதான ஆர்வத்தை குறைத்துவிடும். அவர்களுக்கு ஏற்றார்போல் நீங்கள் வளைந்து நெளிந்து கொடுத்தால் மட்டுமே, அவர்கள் படிக்கத் தொடங்குவார்கள். எல்லா சூழலும் அவர்களுக்கானதாகவே இருக்க வேண்டும்.
Comments
Post a Comment