கிழக்கு ஆப்பிரிக்க நத்தை இந்தியாவில் ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறி, பயிர்களையும் பல்வேறு வகையான தாவரங்களையும் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றால் தாவரங்கள் மட்டுமின்றி, அந்தத் தாவரங்களைச் சார்ந்திருக்கும் மற்ற உயிரினங்களும் முற்றிலுமாகக் காணாமல் போகின்றன. கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த நத்தை வகை, இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவரால் கொல்கத்தாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்ட ஓர் உயிரினமான இந்தக் கிழக்கு ஆப்பிரிக்க நத்தை இந்தியாவில் ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறியது எப்படி என்ற கேள்வி எழுகிறதா?
அதற்கு முதலில் ஆக்கிரமிப்பு உயிரினம் என்றால் என்னவென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிலத்தைச் சேராத உயிரினம், வேறு நிலப்பகுதியிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டிருந்து, இந்த நிலத்திலிருக்கும் மற்ற உயிரினங்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கும் வகையில் அதன் இனப்பெருக்க விகிதமும் உணவுமுறையும் இருந்தால், அதன் காரணமாக, அது பரவியுள்ள நிலத்தில் வாழும் மற்ற உயிரினங்களை ஆபத்துக்குள் தள்ளினால், அதுவே ஆக்கிரமிப்பு உயிரினம் எனப்படுகிறது.
இங்கு கிழக்கு ஆப்பிரிக்க நத்தை எப்படி ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறியது?
இந்த கிழக்கு ஆப்பிரிக்க உயிரினம், முள்ளங்கி, வாழை, குடை மிளகாய், தக்காளி போன்ற பல்வேறு பயிர் வகைகள் மற்றும் இந்திய நிலப்பகுதியிலுள்ள பழங்கள், பூக்கள் உட்பட 60 வகையான தாவரங்களை உணவாகச் சாப்பிடுகிறது. ஆகையால், இந்தத் தாவரங்கள் அனைத்தையும் அவை கூட்டம் கூட்டமாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால் அவை அதிக அளவில் குவிந்து கிடக்கும் தாவரங்களில், அதே தாவரத்தைச் சார்ந்து வாழும் மற்ற உயிரினங்கள் வாழ முடியாமல் போகிறது.
இந்த வகையைச் சேர்ந்த நத்தைகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. சராசரியாக ஓராண்டுக்கு 5 முதல் 6 முறை இவை முட்டையிடுகின்றன. ஒருமுறைக்கு 200 முட்டை வீதம், ஓராண்டுக்கு 1,200 முட்டைகள் வரை இடுகின்றன. அதில் 90 சதவிகிதம் முட்டைகளிலுள்ள நத்தைக் குஞ்சுகள் உயிர் பிழைத்து வளர்கின்றன. குறைந்தபட்சமாகப் பார்த்தாலும், ஒரு நத்தை ஓராண்டில் சுமார் 1,000 நத்தைகள் பிறக்கக் காரணமாக இருக்கிறது.
பல்லுயிரிய வளம், விவசாயம், அனைத்து உயிரினங்களுக்குமான வாழ்வாதாரம், மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்களின் ஆரோக்கியம் என்று அனைத்தின் மீதும் இத்தகைய ஆக்கிரமிப்பு தாவரங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உலக அளவில் மிகவும் ஆபத்தான, மோசமான ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலில் இந்தக் கிழக்கு ஆப்பிரிக்க நத்தை இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகம் முழுக்கவுள்ள வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் இவை தற்போது அதிக அளவில் பரவி பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
கேரளாவில் 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பாலக்காடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே இந்த நத்தைகள் காணப்பட்டன. ஆனால், 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றுமோர் ஆய்வில், இடுக்கி மாவட்டத்தைத் தவிர கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் இவை பரவியிருப்பது தெரியவந்தது.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மதுரை மாவட்டத்திலுள்ள பரவை என்ற ஊரில் வாழைத் தோட்டங்களில் பரவிய ஆப்பிரிக்க நத்தைகளால், பெருமளவிலான வாழை உற்பத்தி அழிக்கப்பட்டது.
19-ம் நூற்றாண்டில், வில்லியம் ஹென்ரி பென்சன் (William Henry Benson) என்ற ஆங்கிலேயே நத்தையினவியல் ஆய்வாளர் (British malacologist), இந்தியாவிற்கு கிழக்கு ஆப்பிரிக்க நத்தையின் ஒரு ஜோடியை மொரீஷியஸிலிருந்து கொண்டு வந்தார். இந்தியாவிலிருந்து அவர் திரும்பிச் செல்லும்போது அவற்றை இந்திய நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிடவே, அவரும் கொல்கத்தாவிலிருந்த தன்னுடைய தோட்டத்தில் அவற்றைத் திறந்துவிட்டுள்ளார். அதற்குப் பிறகு, 1858-ம் ஆண்டு மீண்டும் இந்தியா வந்த பென்சன், கொல்கத்தாவில் அவை எண்ணிக்கையில் நன்கு பெருகி பரவியிருந்ததாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தியா முழுக்க இவை பரவியதில் மனிதர்களுக்குப் பெரும் பங்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பென்சனால் கொல்கத்தாவிற்குள் நுழைந்த இவை எண்ணிக்கையில் பெருகவே, கொல்லர் ஒருவர் அங்கிருந்து இரண்டு நத்தைகளை வடக்கே பீகாரிலிருந்த அவருடைய ஊருக்கு 60-களில் செல்லப்பிராணியாக வளர்க்க ஆசைப்பட்டுக் கொண்டுவந்தார். பீகாரிலிருந்து எண்ணிக்கையில் பெருகிப் பெருகி அது அண்டை மாநிலங்களுக்கும் பரவியது. ஒடிசாவில் வாழ்ந்த ஒரு விவசாயி, அங்கிருந்து இந்த நத்தைகளைப் பிடித்து, ஆந்திரப் பிரதேசத்தில் அவருக்குச் சொந்தமாக அரக்கு பள்ளத்தாக்கில் இருந்த ஒரு தோட்டத்தில் 1996-ம் ஆண்டு கொண்டுவந்து விட்டார்.
இதைப்போலவே, ஆங்காங்கே பல்வேறு மனிதர்களோடு, பல்வேறு காரணங்களின் அடிப்படையில், வெவ்வேறு மாநிலங்களுக்கு இவை பயணப்பட்டன. அப்படிச் சென்ற அனைத்து மாநிலங்களிலும் எண்ணிக்கையைப் பெருக்கி, தற்போது அச்சுறுத்தக்கூடிய ஆக்கிரமிப்பு உயிரினமாக வளர்ந்து நிற்கிறது.
20-ம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியா முழுக்கவே இவை மிகவும் ஆபத்தான, மோசமான ஆக்கிரமிப்பு உயிரினம் என்று விவசாயிகள் மத்தியில் பெயர் பெறும் அளவுக்கு எண்ணிக்கையில் பெருகின. பழத்தோட்டங்கள், விவசாயப் பயிர்கள் அனைத்திலும் இவை பல பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு தாவரத்தின் நல்ல சதைப்பற்றுள்ள, ஆரோக்கியமான பகுதிகளையே குறி வைத்து இவை சாப்பிடுவதாலும், தாவரம் முழுக்க குறைந்தபட்சம் 20 நத்தைகளாவது கூட்டமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவதாலும் இவை அதிக சேதங்களை விளைவிக்கின்றன. ஒரு தாவரத்தில் இவை சாப்பிடத் தொடங்கிவிட்டால், பூக்கள், மொட்டுகள், தண்டுகள், பழங்கள் என்று அனைத்தையுமே சாப்பிட்டுவிடும்.
சென்னை பெருநகரத்திலும் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளின் படையெடுப்பு பல சேதங்களை சத்தமின்றிச் செய்துவருகின்றன. ஊர்ப்புறங்களில், விவசாய நிலங்களில் இவை ஏற்படுத்தும் சேதங்கள் கணக்கில் வருவதுபோல், நகர்ப்புறங்களில் இவற்றின் எண்ணிக்கைப் பெருக்கத்தால் நிகழும் இழப்புகள் வெளியே தெரிவதில்லை.
மழைக்காலங்களின் அதிகாலை வேளையில் பார்த்தால், தாவரங்கள் சூழ்ந்திருக்கும் ஈரநிலங்களில் இவை மிதமிஞ்சிக் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, வேளச்சேரி ரயில் நிலையத்திற்குப் பின்புறத்திலுள்ள குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் நாலு எட்டு எடுத்து வைப்பதற்குள் நான்கைந்து நத்தைகளைப் பார்த்துவிடலாம். சாலையோரத்திலுள்ள கள்ளிச் செடிகளிலேயே கிளைக்கு ஏழெட்டு நத்தைகளைப் பார்க்கமுடியும். ஓர் உயிரினம், ஆக்கிரமிப்பு உயிரினமாக உருவெடுக்கும் ஆரம்பக்கட்டத்திலேயே நிலைமையை உணர்ந்து அதன் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். இல்லையேல், பிரச்னை எவ்வளவு பூதாகரமாக வளரும் என்பதற்கு கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் ஓர் உதாரணம்.
Comments
Post a Comment