டிரோன்களில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்க்க துர்கா -2 என்ற டிரோன் எதிர்ப்பு அமைப்பு தொழில்நுட்பத்தை இந்தியா கண்டுபிடித்து உள்ளது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் டிரோன்களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
ஜம்மு விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறிய ரக டிரோன்கள் மூலமாக பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். 6 நிமிஷங்கள் இடைவெளியில் தாக்குதல் நிகழ்ந்தது. வெடிகுண்டுகள் வெடித்ததில் தொழில்நுட்பப் பிரிவு கட்டிடங்களில் சிறிய சேதம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் விமானப்படை வீரா்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்களைக் கடத்துவதற்கு பயங்கரவாதிகள் டிரோன்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், டிரோன்களில் வெடிகுண்டுகளை எடுத்து வந்து தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் ரத்னுசக்-காலுசக் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலை மீது ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில் டிரோன் ஒன்று பறந்தது. மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரா்கள், அந்த டிரோனைக் கண்டதும் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
மீண்டும் அதிகாலை 2.40 மணியளவில் மற்றொரு டிரோன் ராணுவ நிலை மீது பறந்தது. அதைக் குறிவைத்தும் ராணுவ வீரா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். ஆனால், இரு டிரோன்களும் வேறு பகுதிக்கு பறந்து சென்றுவிட்டன. வீரா்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து துரிதமாக செயல்பட்டதால், பெரும் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இது போன்ற டிரோன் தாக்குதல்களை சமாளிப்பதற்கான அமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியா கண்டுபிடித்து உள்ளது. விரைவில் ஜம்மு விமானப்படை நிலையத்தில் ஒரு பெரிய ஆள் இல்லா விமான எதிர்ப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்று ராணுவ உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில்,பயங்கரவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதம் ஏந்திய டிரோன்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் டிரோன்கள் எனும் ஆள் இல்லா விமானங்களை கண்டுபிடித்து வீழ்த்தக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துர்கா -2 டிரோன் எதிர்ப்புத் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சிறிய டிரோன்களை அழிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
புதிதாக வான் மூலம் உருவான அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவத்திற்கு இது ஆற்றலை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இதில் உள்ள ராடார் சிஸ்டம் 360 டிகிரி கண்காணிப்பு மூலம் 4 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மிகச்சிறிய டிரோன்களைக் கூட அடையாளம் காட்டிவிடும்.
இது லேசர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பாக இருக்கும். 100 கிலோவாட் திறன் கொண்ட இந்த அமைப்பு மூலம், டிரோன் போன்ற எந்தவொரு பொருளும் லேசர் கற்றை மூலம் ஒன்றரை முதல் இரண்டு கி.மீ உயரத்தில் வானிலேயே அழிக்கப்படும்.இந்த அமைப்பு லேசர் ஆற்றலின் உதவியுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை அடையாளம் கண்டு அழிக்க முடியும்.துர்கா 2 நிலம், கடல் மற்றும் வான்வெளி சார்ந்த தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
மேலும் இதில் உள்ள சென்சர் கருவிகள், ரேடியோ அலைவரிசை போன்றவையும் மிகச்சிறிய வடிவிலான டிரோன்களையும் கண்டுபிடிக்க உதவும் என்றும் அதிகாரி விளக்கியுள்ளார்.
2020 குடியரசு தினத்தின்போதும், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தின் போதும், சுதந்திர தினம் 2020 மற்றும் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு ஆகியவற்றின் போதும் வி.வி.ஐ.பி பாதுகாப்புக்காக இந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டது.
டிரோன் எதிர்ப்பு அமைப்பு உற்பத்திக்காக இந்த தொழில்நுட்பம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) க்கு மாற்றப்பட்டுள்ளது.
Comments
Post a Comment