பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 2050-ம் ஆண்டு வாக்கில் கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக்குகள்தான் அதிகம் இடம்பிடித்திருக்கும் என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. அவற்றை சாப்பிடும் கடல்வாழ் உயிரினங்களின் உடலில் கலந்து இறுதியில் மனிதன் சாப்பிடும் உணவிலும் சேர்ந்துவிடுகின்றன. அதில் கலந்திருக்கும் நச்சுத்தன்மை ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட சுகாதார பிரச் சினைகளுக்கு வழிவகுத்துவிடும். அதிலும் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக், உலகெங்கும் ஒருங்கிணைந்த வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் மக்கும் தன்மை கொண்டவை அல்ல. அதிலும் 60 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது கடினம் என்ற நிலை உருவாகிவிட்டது. பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்க வேண்டியது மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. அதனை கருத்தில் கொண்டு உலக நாடுகள் பலவும் பிளாஸ்டிக்குகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரம்்காட்ட தொடங்கியுள்ளன. அவற்றுள் கனடா, ருவாண்டா, கென்யா, பிரான்ஸ், இந்தியா ஆகிய ஐந்து நாடுகள் ஒற்றை பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக்குகளை ஒழிப்பதற்கு கடும் முனைப்பு காட்டி வருகின்றன.
கனடாவில் இதற்கு முன்பு வரை 10 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்யப்பட்டது. அதனை அதிகப்படுத்துவதுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பூஜ்ஜிய நிலையை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ருவாண்டா நாடு 2008-ம் ஆண்டிலேயே ஒரு சில விதி விலக்குகளை தவிர்த்து பிளாஸ்டிக் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு தடை விதித்து உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு மழலை பருவம் முதலே பள்ளியில் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் தடையை கடுமையாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யா முதன்மையானது. அங்கு உற்பத்திக்கோ, விற்பனை செய்வதற்கோ பொருளை பிளாஸ்டிக் பையில் எடுத்து சென்றால் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தடைக்கு முன்பு பல்பொருள் அங்காடிகளில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.
உணவு பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், ஸ்பூன்கள், பெட்டிகள் போன்றவற்றை விற்பனை செய்வதை 2016-ம் ஆண்டில் பிரான்ஸ் தடை செய்தது. 2040-ம் ஆண்டுக்குள் அனைத்து வகையான ஒற்றை பயன்பாட்டு கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது. பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் 80 சதவீதத்தை முறையாக அப்புறப்படுத்தாமல் கடலில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகளை கலக்க செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. 2022-ம்
ஆண்டுக்குள் அனைத்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கையும் அகற்ற திட்டமிட்டுள்ளதாக 2017-ம் ஆண்டு அறிவித்தது.
Comments
Post a Comment