கடையில் வாங்கும் பொருட்களின் பாக்கெட்டுகளில் அவை காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். இருப்பினும் ஒரு சில சமையல் பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாதவை. நீண்ட ஆயுள் கொண்டவை. அவற்றை சரியான முறையில் பராமரித்து பாதுகாத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். ஆண்டுக்கணக்கில் கூட சேமித்து வைக்கலாம். அப்படி காலாவதியாகாமல் நீண்ட ஆயுள் கொண்ட பொருட்கள் சிலவற்றை பார்ப்போம்.
1. தேன்: இது எளிதில் கெட்டுப்போகாத தன்மை கொண்டது. தேனில் சுமார் 17 சதவீதம் நீர் சூழ்ந்திருக்கும். ஆனாலும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் வளர்வதற்கு இடம் கொடுக்காது. பாக்டீரியாக்களை நீரிழப்பு செய்து சுய பாதுகாப்பை தக்கவைத்துக்கொள்ளக்கூடியது. பாட்டிலில் சேமித்துவைக்கப்படும் தேனின் அடிப்பகுதி, கெட்டியாகி இருந்தால் சூடான நீரில் சிறிது நேரம் வைத்தால் போதும். அது உருகி இயல்பு நிலைக்கு வந்துவிடும். எப்போதும்போல் அதன் சுவை இனிமையாகவே இருக்கும்.
2. சர்க்கரை: சமையல் அறையில் தினமும் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக சர்க்கரை இருக்கிறது. சர்க்கரையை ஜாடியில் சேமித்து வைக்க வேண்டும். அதனை எடுப்பதற்கு ஈரப்பதமான ஸ்பூனை பயன்படுத்தக்கூடாது. சர்க்கரையை ஈரப்பதத்தில் இருந்து விலக்கி வைத்தால் பல ஆண்டுகள் கெட்டுப்போகாமல் இருக்கும். வெள்ளை சர்க்கரை, புரவுன் சுகர் எனப்படும் பழுப்பு சர்க்கரை இவை இரண்டையும் காற்றுப்புகாத கொள்கலனில் சேமித்து வைக்க வேண்டும். சர்க்கரையுடன் ஈரப்பதம் கலந்தால் கட்டிப்பிடித்துவிடும்.
3. உப்பு: சமையலில் தவிர்க்கமுடியாத அங்கம் வகிக்கும் உப்பு தினமும் உபயோகப்படுத்தப்படுகிறது. மற்ற உணவு பொருட்களை பாதுகாக்கவும் உப்பு பயன்படுகிறது. தேனை போலவே, உப்பும் பாக்டீரியாவை நீரிழப்பு செய்யக்கூடியது. உப்பை சரியான முறையில் சேமித்து வைத்தால் பல ஆண்டுகள் பயன்படுத்தலாம். ஆனால் அயோடைஸ்டு செய்யப்பட்டால் சில காலங்களில் கெட்டுப்போய்விடும்.
4. அரிசி: காலாவதியாகாத மற்றொரு உணவு வெள்ளை அரிசி. இருப்பினும், காற்று புகாத கொள்கலனில் சேமிக்கப்பட வேண்டும். இதில் குறைந்த அளவு எண்ணெய் தன்மை உள்ளடங்கி இருக்கிறது. அது இயற்கையான முறையில் அரிசியை பல ஆண்டுகள் பாதுகாக்க உதவுகிறது. அரிசி அதிகம் இருந்தால் பெரிய கொள்கலனில் வைத்துக்கொள்ள வேண்டும். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய கொள்கலனில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் பெரிய கொள்கலனில் இருந்து தினசரி திறந்து மூடுவது தவிர்க்கப்படும். ஈரப்பதம் படிவதற்கு வாய்ப்பிருக்காது. காற்று புகுந்தாலோ, ஈரப்பதம் படிந்தாலோ அரிசி விரைவாக கெட்டுப்போய்விடும். எண்ணெய் உள்ளடக்கம் அதிகம் இருந்தால் மட்டுமே அரிசி கெடாது.
5. சோயா சாஸ்: உணவகங்களில் அதிக அளவு பயன்படுத்தப்படும் சோயா சாஸ் எளிதில் கெட்டுப்போகாது. எந்த அளவுக்கு அதனை திறக்காமல் உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு அதன் ஆயுளும் நீடிக்கும். சோயா சாஸை அடிக்கடி திறந்து பயன்படுத்துவதாக இருந்தால் பிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். சோயா சாஸில் உப்பும் அதிகம் கலந்திருக்கும். அது இயற்கை பாதுகாவலனாக செயல்படும்.
6. வினிகர்: எளிதில் காலாவதியாகாத மற்றொரு சமையலறை மூலப்பொருள் வினிகர். இது பல உணவுகளைப் பாதுகாக்கப் பயன்படும் முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. இது இயற்கையாகவே அமிலத்தன்மையையும், நீண்ட ஆயுளையும் கொண்டது. வெள்ளை வினிகர், ஆப்பிள் சிடேர் வினிகர், அரிசி வினிகர் போன்ற வினிகர் வகைகள் நீண்ட ஆண்டுகள் கெட்டுப்போகாதவை.
7. சோள மாவு: இதுவும் கெட்டுப்போகாமல் பல ஆண்டுகள் நீடிக்கும் மற்றொரு உணவு பொருளாகும். ஆனால், எந்த நிலையிலும் ஈரப்பதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை குளிர்ந்த இடத்திலும், வெப்பமான இடத்திலும் சேமித்துவைத்துக்கொள்ளலாம். ஈரப்பதம் ஊடுருவாமல் இருக்க, காற்றுப்புகாத ஜாடியில் சேமித்து வைக்கவேண்டும். அப்படி செய்தால் பல ஆண்டுகள் கெடாமல் பாதுகாக்கலாம்.
Comments
Post a Comment