அமெரிக்காவில் ஒரே மாதத்தில் பிறந்த தோழிகள் 3 பேரும் 100 வயதைக் கடந்ததை, ஒன்றாக இணைந்து கொண்டாடியுள்ளனர்.
உலகின் ஏதாவதொரு மூலையில் வித்தியாசமான மற்றும் விநோதமான நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டு இருக்கின்றன.
இந்த கொரோனா காலத்தில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாக போராடி வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 3 தோழிகள் ஒன்றாக இணைந்து தாங்கள் 100வயதைக் கடந்ததை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர். இந்த விநோத நிகழ்வு பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் ரூத் ஸ்வார்ட்ஸ் (Ruth Schwartz), எடித் ‘மிட்ஸி’ மாஸ்கோ (Edith ‘Mitzi’ Moscou) மற்றும் லோரெய்ன் பிர்ரெல்லோ (Lorraine Pirrello) ஆகியோர் வசித்து வருகின்றனர். நெருங்கிய தோழிகளான மூவரும் 1921 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெவ்வேறு நாட்களில் பிறந்தவர்கள்.
அன்று முதல் இன்றுவரை சுமார் 100 ஆண்டுகளாக தோழிகளாக இருக்கும் மூவரும், கடந்த மாதம் தங்களின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். 100 வயதைக் கடந்த கோல்டன் கேர்ல்ஸ் மூவரின் குடும்பத்தினர், பேரன், பேத்திகள் என அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
100 ஆண்டு காலத்தில் பல்வேறு மகிழ்ச்சிகரமான மற்றும் துன்பியல் நிகழ்வுகளை பார்த்த மூவரும் தங்களின் அனுபவங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் பாதுகாப்பாக இருந்த மூவரும் தற்போது தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.
கோல்டன் கேர்ல்ஸில் ஒருவரான லோரெயன் பேசும்போது, கடந்த 100 ஆண்டுகளில் மூவரும் பல்வேறு நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். அதனை ஒன்றாக எதிர்கொண்டு இந்த மிகப்பெரிய நாளை சந்தித்திருப்பது எங்கள் மூவரின் வாழ்க்கையில் குறிப்பிடப்பட வேண்டிய தருணம் எனத் தெரிவித்தார்.
60 மற்றும் 90களில் ஒன்றாக டென்னிஸ் விளையாடிய நாட்கள் நினைவுகளில் அப்படியே இருப்பதாக தெரிவித்த லோரெய்ன், அதனை நினைக்கும்போது, அப்படியான நாட்கள் மீண்டும் கிடைத்துவிடாதா என வேதனைப்படுவதாகவும், ஆனாலும் அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தாமல் இருக்க முடியவில்லை எனக் கூறினார்.ரூத் ஸ்வார்ட்ஸ் பேசும்போது, அதிர்ஷ்ட நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் தான் பிறந்திருப்பதாக கூறி மகிழ்ந்தார். இவ்வளவு நாட்கள் தாங்கள் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், கொரோனாவையும் வென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருப்பது கூடுதல் சந்தோஷத்தைக் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரூத், ஓபெரா பாடகராக வலம் வந்தவர் லொரெய்ன், எடித் மாஸ்கோ தொழிலபதிபராக இருந்துள்ளார். ஆர்டியா சீனியர் லிவிங் என்ற முதியோர் ஹோமிலும் அவர்களுடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ஒரு வார கால பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களின் தோழமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடைசியாக, மிகப்பெரிய கேக் ஒன்றை வெட்டி அவர்களின் பிறந்தநாள் விழாவை குடும்பத்தினர் நிறைவு செய்தனர்.
ALSO READ :
Comments
Post a Comment