இன்றைய தலைமுறையினர் தங்கள் திருமணம் விமரிசையாகவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான வித்தியாசமான நிகழ்வு களுடனும் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
விருந்து உபசரிப்பும் மற்றவர்கள் மெச்சும்படி பேசப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்து கிறார்கள். தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை திருமணத்தில் பரிமாற விரும்புபவர்கள் அதனையே திருமணத்தின் பேசும்பொருளாக மாற்றிவிடுவதும் உண்டு. அப்படிப்பட்ட திருமண நிகழ்வு ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
மணப்பெண் கழுத்தில் மாலைக்கு பதிலாக பானி பூரிகள் வரிசையாக கோர்க்கப்பட்டிருக்கின்றன. அவர் அணிந்திருக்கும் வளையல்களுடன் பானி பூரிகளும் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. கழுத்திலும், கையிலும் பானி பூரிகள் அலங்கரித்துக்கொண்டிருக்க, அவர் சாப்பிடும் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவரது தலையில் கிரீடம் போல் பானி பூரிகளை அடுக்கி அணிவித்து அழகுபார்க்கிறார்கள். அவருக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் மேஜையில் வட்ட வடிவிலான பெரிய தட்டில் பானிபூரிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் அருகேயும் மலர்க்கொத்து போல் பானி பூரியை குவியலாக அழகுபடுத்திவைத்திருக்கிறார்கள். பானி பூரி சகிதமாக மணமகள் முக மலர்ச்சியுடன் அமர்ந்திருக்க, அவருக்கு பானி பூரியை ஊட்டி விட்டு மகிழ்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது.
‘‘பெண்கள் ஏன் பானி பூரியை மிகவும் விரும்புகிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது’’ என்று ஒருவர் ஆச்சரியத்தோடு பதிவிட்டிருக்கிறார். "கனவு திருமணம்" என்று ஒருவர் கருத்து பதிந்திருக்கிறார். மற்றொருவர், ‘‘இது பானிபுரி காதலருக்கு ஏற்றது’’ என்று கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில் மணமகளின் தலையில் அப்பளம் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக உயரமாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஒருவர் கையால் அழுத்தி உடைக்கிறார். அப்பள சிதறல்கள் கீழே விழுவதை பார்த்து மணமகள் வெளிப் படுத்தும் உணர்வுகளும் சமூகவலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. இவை திருமண சடங்கின் ஒரு பகுதியாக நிகழ்ந்ததா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. மணமகள் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற தகவலும் இடம்பெறவில்லை.
Comments
Post a Comment