மராட்டியத்தில் 37 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளான நிலையில், தமிழகம், கர்நாடகம், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 1500-க்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. நாடு முழுவதும் தொற்று பரவல் இல்லாவிட்டாலும் கூட, 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 5.3 சதவீதம் அதிகம் ஆகும்.
மராட்டியத்தில் 37 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளான நிலையில், தமிழகம், கர்நாடகம், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 1500-க்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து 2-வது நாளாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமை தாங்கினார். இதில் மராட்டியம், குஜராத், அரியானா, தமிழ்நாடு, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய 12 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாட்டின் 46 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், நகராட்சி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ராஜேஷ் பூஷண் பேசுகையில், அதிகளவு பாதிப்பை கொண்டுள்ள 46 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் தீவிர கவனம்செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பரிசோதனையை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகளவில் சார்ந்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களையும் பரிசோதித்து தனிமைப்படுத்த 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தின் முக்கிய நடவடிக்கை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு 5 அம்ச திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்தது.
அந்த 5 அம்சங்கள், பரிசோதனையை அதிகரித்தலும் பயனுள்ள தனிமைப்படுத்துதலும், பாதிப்புக்குள்ளானவர்களின் தொடர்பு தடம் அறிதல், சுகாதார பணியாளர்களை மீண்டும் ஊக்குவித்தல், பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல், தடுப்பூசிக்கான இலக்கு அணுகுமுறையை மேற்கொள்ளுதல் ஆகியவை ஆகும்.
மேலும், மாநிலங்கள் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இவை:-
* 70 சதவீத பாதிப்புகளை கொரோனாகால விதிமுறைகளை பின்பற்ற செய்து கட்டுப்படுத்த முடியும் என மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
* முன்னுரிமை பிரிவினருக்கு தடுப்பூசிகளை போடுவதில் கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டது.
* தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
* சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் ஆகிய 4 இடங்களில் உள்ள தடுப்பூசி கிடங்குகளில் போதுமான தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment