2020ல் உலகையே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றும், லாக்டவுன் அறிவிப்புகளும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்புகளையும் கடுமையாகப் பாதித்த இதே வேளையில் உலக நாடுகளில் இருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும், பொற்காலமாகவும் மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் முதல் இந்தியா போன்ற வளரும் நாடுகள் வரையில் இருக்கும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்தப் பேன்டமிக் காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் 657 பில்லியனர்களின் சொத்து மதிப்பு சுமார் 44 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என இரு முக்கிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
657 அமெரிக்கப் பில்லியனர்கள்
அமெகரிக்கன்ஸ் பார் டாக்ஸ் பேர்நெஸ் மற்றும் இன்ஸ்டியூட் பார் பாலிசி ஸ்டெடீஸ் ஆகிய இரு அமைப்புக்களும் போர்ப்ஸ் அமைப்பின் தகவல்களை அடிப்படையாக வைத்துத் தயாரித்த ஆய்வறிக்கையில் மார்ச் 18, 2020 முதல் கடந்த ஒரு வருட காலத்தில் அமெரிக்காவில் இருக்கும் 657 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 44.6 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சாமானிய மக்கள்
ஆனால் இதேவேளையில் அமெரிக்காவில் சாமானிய மக்கள் வரலாறு காணாத வகையில் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு உள்ளனர். குறிப்பாக நடுத்தரப் பொருளாதாரப் பிரிவில் இருக்கும் மக்கள் பல பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளனர்.
8 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்தனர்
மார்ச் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 8 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதன் வாயிலாக ஜூன் 2020 முதல் நவம்பர் 2020 காலகட்டத்தில் சுமார் 80 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளனர்.
மக்கள் மத்தியில் பெரிய வித்தியாசம்
வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவிலேயே பணக்காரர்களுக்கும், சாமானிய மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஏற்ற தாழ்வு நிலவுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. இதேபோல் வறுமைக் கோட்டிற்குக் கீழ் சென்றுள்ள மக்களை மேம்படுத்துவதில் அமெரிக்க அரசு மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்களைத் திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேன்டமிக் காலத்தில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான ஜெப் பைசோஸ் 183.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருந்தாலும், கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோரின் சொத்து மதிப்பு தான் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின்
மார்ச் 24, 2020 முதல் மார்ச் 24, 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் லேரி பேஜ்-ன் சொத்து மதிப்பு 11.8 பில்லியன் டாலர் அதிகரித்து மொத்த சொத்து மதிப்பு 94.3 பில்லியன் டாலராக உள்ளது. இதேபோல் செர்கி பிரின் சொத்து மதிப்பு 11.4 பில்லியன் டாலர் அதிகரித்து மொத்த சொத்து மதிப்பு 91.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
நம்ம ஊர் ஆதானி வேற லெவல் பாஸ்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கப் போட்டிப் போட்டு வரும் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் ஆகியோரை விடவும் நம்ம ஊர் கௌதம் அதானி இந்த ஆண்டு அதாவது கொரோனா தொற்று நிறைந்த காலத்தில் அதிகப் பணத்தைச் சம்பாதித்து உள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் படி கௌதம் அதானி 2021ஆம் நிதியாண்டில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஓரே வருடத்தில் 16.2 பில்லியன் டாலர் அதிகரித்து 50 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது.
Comments
Post a Comment