குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.
5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.
`கண்ணாடி குவளையை கையில் தூக்காதே.. அது கீழே விழுந்தால் உடைந்துவிடும்..' என்று குழந்தைகளிடம் சொன்னால், சில குழந்தைகள் `அதெல்லாம் எனக்கு தெரியும். உங்க வேலையை நீங்கள் பாருங்கள்' என்று சொல்லும். பெற்றோர் ஒன்று சொன்னால், சில குழந்தைகள் பதிலுக்கு ஒன்பது சொல்லும். இது பெற்றோருக்கு பிடிக்காதபோது அந்த குழந்தைக்கு `வாயாடி' பட்டம் சூட்டிவிடுவார்கள். பெரும்பாலும் சிறுமிகள்தான் இந்த பட்டத்தை சுமக்கிறார்கள்.
`கண்ணாடி குவளையை தூக்காதே' என்று தாயார் சொல்லும்போது, அந்த குழந்தையின் மனதில் `நீங்கள் மட்டும் தூக்குகிறீர்கள். உங்களால் சரியாக செய்ய முடிந்த காரியத்தை என்னால் சரியாக செய்ய முடியாது என்று நீங்கள் நினைப்பது ஏன்?' என்ற கேள்வி எழும். தனது திறன் அங்கே குறைத்து மதிப்பிடப்படுவதாக அந்த குழந்தை நினைத்து ஆத்திரப்படுவதால்தான் அந்த கேள்வி எழுகிறது.
`அந்த கண்ணாடி குவளையை உன்னாலும் தூக்க முடியும். மெதுவாக, கவனமாக அதை பிடித்து தூக்கவேண்டும். ஆனால் இப்போது அதை தூக்கவேண்டாம். அங்கேயே இருக்கட்டும். அதை தூக்கவேண்டிய அவசியம் ஏற்படும்போது உன்னை அழைக்கிறேன்' என்று கூறினால், குழந்தை பெரும்பாலும் அமைதியாகிவிடும். பதிலுக்கு பதில் பேசாது.
தாங்கள் விரும்பும்படிதான் பெண் குழந்தைகளின் இயல்பு இருக்கவேண்டும் என்று கருதும் தாய்மார்கள், அந்த குழந்தைகள் பதிலுக்கு பதில் பேசிவிட்டாலே வாயாடி என்று பட்டம் கொடுத்துவிடுகிறார்கள். அந்த வார்த்தையின் வலி, பிரயோகிப்பவர்களுக்கு தெரிவதில்லை. தாங்கிக்கொள்ளும் குழந்தைக்குதான் தெரியும்.
குழந்தைகளின் கருத்துக்களை சரியாக கேட்காமலும், அவர்கள் சொல்வதை சரிவர புரிந்துகொள்ளாமலும் `பொய் சொல்கிறார்கள்' என்ற முடிவுக்கு பலரும் வந்துவிடுகிறார்கள். ஆகவே விளையாட்டுத்தனமாக பொய் சொல்லத் தொடங்கும் காலகட்டத்திலே குழந்தைகளை முறைப்படுத்தி உண்மையை பேச பழக்கவேண்டும்.
Comments
Post a Comment