மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ்வதற்குச் சிறந்த நகரங்களுக்கான பட்டியலில்
பெங்களூரு முதல் இடத்தையும், சென்னை நான்காம் இடத்தையும், கோவை 7ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்தியாவில் மக்கள் வாழ்வதற்குச் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டும் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார்.
நகரங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, பொருளாதார, சமூக உள்கட்டமைப்பு வசதிகள் எந்தளவு செய்யப்பட்டுள்ளது போன்றவற்றை வைத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பட்டியைக் கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
பெங்களூரு தான் பேஸ்ட்
இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்களுக்கான பட்டியலில் கர்நாடக தலைநகர் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து புனே இரண்டாம் இடத்தையும், அகமதாபாத் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. சூரத் ஐந்தாம் இடத்திலும் நவி மும்பை ஆறாவது இடத்திலும் உள்ளன. அதேபோல வதோத்ரா, இந்தூர் மற்றும் கிரேட்டர் மும்பை ஆகிய நகரங்கள் முறையே எட்டு முதல் பத்து வரையிலான இடங்களைப் பெற்றுள்ளன. தேசிய தலைநகர் டெல்லி 13ஆவது இடத்தை பெற்றுள்ளது.
தமிழக நகரங்கள்
இந்தப் பட்டியிலில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நான்காவது இடத்திலும், கோவை ஏழாவது இடத்திலும் உள்ளன. அதேபோல 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட பட்டியலில் டாப் 10 நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்தாவது இடத்தில் சேலமும், ஆறாவது இடத்தில் வேலூரும், 10ஆம் இடத்தில் திருச்சியும் இடம் பெற்றுள்ளன.
மகாராஷ்டிராவுக்கு ஏமாற்றம்
கடந்த 2018ஆம் ஆண்டு பட்டியலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த புனே, நவி மும்பை, கிரேட்டர் மும்பை ஆகிய மூன்று நகரங்கள் டாப் 3 இடங்களைப் பிடித்திருந்தன. ஆனால், அவை தற்போது முறையே இரண்டு, ஆறு மற்றும் 10ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை நான்காவது இடத்திலிருந்து திருப்பதி 46ஆவது இடத்திற்கும் 46ஆவது இடத்திலிருந்த சத்தீஸ்கர் 29ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
சிறந்த நகராட்சிகள்
அதேபோல சிறப்பாகச் செயல்படும் நகராட்சிகளுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட நகராட்சிகளில் இந்தூர் முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சூரத் மற்றும் போபால் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகராட்சியும் டாப் 10இல் இடம் பெறவில்லை. 10 லட்சத்திற்கும் குறைவான மக்களைக் கொண்ட நகராட்சிகளில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. இதில் சேலம், திருப்பூர் ஆகிய நகராட்சிகள் 5 மற்றும் 6ஆம் இடத்திலும் திருநெல்வேலி 10ஆம் இடத்திலும் உள்ளன.
Comments
Post a Comment