கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாகவே உலகத்தை ஆட்டி படைத்து வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் எழுந்துள்ளது.
அதேபோல் சர்க்கரை நோயாளிகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாமா? போட்டுக்கொண்டால் ஏதாவது பக்க விளைவுகள் வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
சர்க்கரை நோயாளிகள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது.
blood thinners மருந்து எடுத்துக்கொள்வோரும் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம். அவ்வாறு போட்டுக்கொள்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
அதே போல் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் ஏதாவது பக்கவிளைவுகள் வருமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு உறுதியாக சொல்ல முடியாது. பக்கவிளைவுகள் வரலாம். வராமலும் இருக்கலாம். எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சில பக்கவிளைவுகள் இருக்கத்தான் செய்யும்.
எந்த தடுப்பூசியாக இருந்தாலும் சிறிய அளவில் சில அறிகுறிகள் ஏற்படும். அதாவது காய்ச்சல், உடல் வலி போன்ற சில அறிகுறிகள் ஒரு சிலருக்கு ஒரு நாள் இருக்கலாம். அதற்காக பயப்பட தேவையில்லை, இதற்கு பாராசிட்டமோல்(Paracetamol Tablets) மாத்திரையை போட்டுக்கொண்டு ஒருநாள் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். எந்த பயமும் கிடையாது.
உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருந்துவரை அணுகி அவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கான விடையை அறிந்து கொண்டு கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ளுங்கள். இது மட்டும் தான் இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளியில் வர ஓரே வழியாகும்.
இவ்வாறு கூறினார்.
Comments
Post a Comment