டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பியூச்சர் டெக்னாலஜி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க் அடுத்தடுத்து புதிய திட்டங்களையும் முடிவுகளை எடுத்து வரும் நிலையில், சமீபத்தில் ஹைப்பர் லூப், சுரங்க வழி போக்குவரத்து, செயற்கைக்கோள் இண்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் போன்ற பல முக்கியத் திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஸ்டார்பேஸ் என்கிற புதிய நகரத்தை உருவாக்க உள்ளதாக எலான் மஸ்க் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ்
எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை உருவாக்குவதற்காகத் தன்னிடம் இருந்த அனைத்துச் சொத்துக்கள் மற்றும் பண இருப்பை முதலீடு செய்தது அனைவருக்கும் தெரியும்.
இந்நிறுவனம் விண்வெளி பயணத்தை எளிமையாக்குவது மட்டும் அல்லாமல் ஒரு முறை பயன்படுத்திய ராக்கெட்-ஐ மறுபடியும் பயன்படுத்துவதற்காக safe landing தொழில்நுட்பத்தை உலகிலேயே முதல் முறையாக உருவாக்கி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.
போகா சீகா கிராமம்
ராக்கெட்-ஐ விண்ணுக்கு ஏவி பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டெக்சாஸ் நகரத்தில் போகா சீகா என்ற ஒரு கிராமத்தை மொத்தமாக வாங்கியது. இந்தக் கிராமத்தில் ஏற்கனவே இருந்தவர்களுக்குச் சந்தை விலையை விடவும் பல மடங்கு அதிகத் தொகை கொடுத்து மொத்த கிராமத்தையும் வாங்கியது.
SpaceX ராக்கெட் ஏவுதளம்
2014ல் இந்தக் கிராமத்தைக் கைப்பற்றிய ஸ்பேஸ் எக்ஸ், சில மாதங்களிலேயே இந்தக் கிராமத்தை ராக்கெட் ஏவுதளமாக மாற்றியது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பரிசோதனைகளில் தோல்வி அடைந்தாலும் தற்போது வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
ஸ்டார்பேஸ் - புதிய நகரம்
இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவுதளம் இருக்கும் போகா சீகா பகுதியை ஸ்டார்பேஸ் என்ற பெயரில் பெரிய நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க். போகா சீகா பகுதி டெக்சாஸ் மாகாணத்தின் கேம்ரான் கவுன்டியில் உள்ளது.
பெரிய நகரம் - Starbase
எலான் மஸ்க்-ன் புதிய ஸ்டார்பேஸ் நகரம் போகா சீகா கிராம பகுதி மட்டும் அல்லாமல் அருகில் இருக்கும் சில முக்கியப் பகுதிகளையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் தெற்கு முனையில் புதிதாக ஒரு பிரம்மாண்ட நகரம் உருவாக உள்ளது.
அரசு அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை
எலான் மஸ்க் தலைமையில் ஸ்பேஸ் எக்ஸ் தற்போது கேம்ரான் கவுன்டி அரசு அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். புதிய நகரத்தை உருவாக்குவதற்கான அனுமதி, முறையாக மக்களிடம் முன் அனுமதி பெறும் பணியில் இறங்கியுள்ளது.
5 எரிவாயு கிணறுகள்
இதேபோல் ஜனவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 5 எரிவாயு கிணறுகளைத் தோண்ட உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த 5 எரிவாயு கிணறுகள் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் ஏவு தளம் அனைத்தும் எரிவாயுவில் இயங்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.
தற்போது எலான் மஸ்க்-ன் ஸ்டார்பேஸ் நகரத் திட்டத்திற்கு இந்த 5 எரிவாயு கிணறுகள் பெரிய அளவில் உதவும்.
Comments
Post a Comment