குறிப்பாக, நாட்டின் தலைநகரமான டெல்லியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் உயிர்காக்கும் ஆக்சிஜன் இல்லாத சூழல் நிலவுகிறது.
கோவிட் வைரஸ் பாதிப்பால் தத்தளிக்கும் 100 வென்டிலேட்டர்களை இறக்குமதி செய்ய உள்ளதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசம், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்தனர். குறிப்பாக, நாட்டின் தலைநகரமான டெல்லியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் உயிர்காக்கும் ஆக்சிஜன் இல்லாத சூழல் நிலவுகிறது. அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களும் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், தங்களது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணித்து ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டுவர வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் போக்க சிங்கப்பூர், சவுதி அரேபியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களால் இயன்ற மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து வருகின்றன. திரவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் என கொடுத்து உதவுகின்றன.
உலக நாடுகள் மட்டுமின்றி கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் ஜாம்பவான்களும் இந்தியாவுக்கான உதவியை செய்ய முன்வந்துள்ளன. கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் நிதியுதவியை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. இதேபோல், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்கின்றன. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் தற்போது இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை அந்நிறுவனம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய உள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கைவசதி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமேசான், இந்த நேரத்தில் 100 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு கொடுக்க அமேசான் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது. Medtronic’s PB980 மாடலைச் சேர்ந்த வென்டிலேட்டரை மெட்ரானிக் நிறுவனம் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த வென்டிலேட்டர்கள் இந்தியாவை அடையும் எனக் கூறியுள்ள அமேசான், அதற்காக மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளது. நாட்டில் நிலவும் அவசர தேவையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, அந்த வென்டிலேட்டர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பும் எனவும் அமேசான் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் பரவலில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள இந்திய அரசுடன், அமேசானும் துணை நிற்கும் என்றும், தேவைப்படும் உதவிகளை மேற்கொண்டு செய்ய தயாராக இருப்பதாகவும் அமேசான் இந்தியா கூறியுள்ளது.
Comments
Post a Comment