நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புத்துணர்ச்சி ஊட்டும் பானங்கள்

பானங்கள் தாகத்தை தணிப்பதற்காகவும் நமதுஉடலுக்கு தேவையான அளவு திரவத்தை அளிப்பதற்காகவும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இத்தகைய பானங்கள் சத்துக்களைக் கொண்டதாகவும் புத்துணர்ச்சியைத் தூண்டு வனவாகவும் உள்ளன.
அன்றாட உணவுத் திட்டத்தில் பானங்களின் பயன்கள்

கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டு தயாரிக்கப்பட்ட பானங்கள், எலுமிச்சைப் பழச்சாறு, இஞ்சியிலிருந்து தயாரிக்கப்படும் ஏல் (ale) போன்ற பானங்கள், புட்டியில் அடைக்கப்பட்ட பிற பானங்கள், பழச்சாறுகள், குளிரூட்டப்பட்ட தேநீர், காபி போன்றவை புத்துணர்ச்சி அளிப்பதற்காக அருந்தப்படுகிறது.

சத்துஊட்டும் பானங்கள்

பாஸ்டரைசேஷன் முறையில் பதப்படுத்தப்பட்ட மோர், சாக்லெட் சுவையுள்ள பானங்கள், மற்றும் கோகோ (Cocoa) பானங்கள், ரம் (Rum) போன்ற மது வகைகளில் கலக்கப்படும் முட்டை நாக் (Egg Nog), பழச்சாறுகள், குளுக்கோஸ் கலந்த நீர், கார்பன்டை ஆக்ஸைடு சேர்க்கப்பட்ட எலுமிச்சைச் சாறு போன்றவை சத்து நிறைந்த பானங்கள் ஆகும்.

ஊக்கமளிக்கும் (STIMULANT) பானங்கள்

தேநீர், காப்பி, கோகோ மற்றும் சாக்லெட் அடங்கிய பானங்கள் ஊக்கத்தை அளிக்கக் கூடியவைகளாகும்.

தணிவிக்கும் பானங்கள் (SOOTHING AGENTS)

மிதமான வெப்ப நிலையுள்ள பால் மற்றும் சூடான தேநீர் இவ்வகையைச் சார்ந்தது.

பசி தூண்டும் பானங்கள் (APPETIZERS)

பசி தூண்டுவன என்பவை ஒரு மனிதனின் பசியை அதிகரிக்க பயன்படுத்தபடுபவைகளாகும். (உ.ம்) சூப்புகள், பழச்சாறுகள். சூப்புகளை உணவு உண்ணும் முன்பு அருந்தினால், அவை பசியைத் தூண்டி, உணவு உட்கொள்ளும் அளவை அதிகப்படுத்தி, உண்ண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்.

ஆல்கஹால் அல்லாத பானங்கள் (NON-ALCOHOLIC DRINKS)

தேநீர்

தேநீர் தேயிலைச் செடியின் இலையிலிருந்தும் தேயிலை பூக்களிலிருந்தும் கிடைக்கின்றன. தேநீரின் தரம் தேயிலைகளுக்கு, தேயிலைத் தொழிற்சாலைகளில் கொடுக்கப்படும் செய்முறைகளையும் பதப்படுத்தும் முறையும் பொருத்தே நிர்ணயிக்கப்படும். தேநீர் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய ஊக்கியாகப் பயன்படுத்தக்கூடிய பானமாகும். தேநீரின் நறுமணத்திற்கு அடிப்படையான காரணிகள் கஃபைன் (Caffine), ஞானினை (Tannin) வெளியிடக் கூடிய கூட்டுப் பொருட்கள் மற்றும் சிறிய அளவிலுள்ள முக்கியமான எண்ணெய்களாகும். கஃபைன் உற்சாகமளிக்கக்கூடிய ஊக்கியாக செயல்படுகிறது. டானின் நிறமும், சுவையும் அளிக்கிறது. தேயிலையிலுள்ள முக்கியமான எண்ணெய்கள், தேநீருக்கு தனித் தன்மையுடைய மணத்தினை தருகின்றது.

தேயிலைகளை கொதிக்கும் நீருள்ள, தேநீர் கொட்டிலில் (kettle) இட்டு தேநீர் தயாரிக்கலாம் அல்லது ஏற்கெனவே சூடாக்கிய தேநீர் பாத்திரத்தில் தேயிலைகளைப் போட்டு அதன் மேல் கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது நேரம் கழித்து தேநீர் தயாரிக்கலாம். தேயிலையின் அளவு மற்றும் ஊற வைக்கும் நேரத்தைப் பொருத்து நம் விருப்பத்திற்கேற்ப திடமான பானம் நமக்கு கிடைக்கும். ஒரு தேக்கரண்டி தேயிலைகளைக் கொண்டு 1 கப் சிறந்த தேநீரைத் தயாரிக்கலாம். தேயிலைகளைக் கொதிநீரில் 5 நிமிடங்கள் மட்டுமே காய்ச்சி, பின் வடிகட்டுதல் வேண்டும். 5 நிமிடங்களுக்கு மேல் காய்ச்சினால் ஒரு வித கசப்பு சுவையை ஏற்படுத்தும். பாலும், சர்க்கரையும் சேர்ப்பது, தனிநபரின் விருப்பத்திற்கேற்ப மாறுபடும்.

காப்பி

காப்பிச் செடியின் விதையிலிருந்து காப்பித் தூள் தயாரிக்கப்படுகிறது. காப்பிக் கொட்டையிலுள்ள கஃபைன் மற்றும் டானின் போன்ற நறுமணப் பொருட்கள் காப்பியின் தரத்தை நிர்ணயிக்கின்றன. காப்பியை வடிகட்டுதல் (filtration) முறையிலும், நீர்ம வகையில் வடிகட்டுதல் (percolation) முறையிலும் தயாரிக்கலாம்.

கோகோ மற்றும் சாக்லெட் பானங்கள்

கோகோ மற்றும் சாக்லெட் வகை பானங்கள் கோகோ விதைகளை நன்கு அரைப்பதால் கிடைக்கின்றன. இந்த பானங்கள் காப்பி, தேநீர் போன்றவற்றை விட அதிக சத்துக்களைக் கொண்டது. இதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இவ்வெப்பநிலையில் சிறிது நேரம் வைப்பதினால் கோகோவின் நறுமணம் மிகுதியாய் வெளிவருகிறது. பானத்தின் அடியில் தங்கும் வீழ்படிவுகளின் அளவையும் குறைக்கின்றது.

பழ பானங்கள்

பழபானங்கள் ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சம்பழம், தக்காளி போன்ற பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை, தேர்ந்தெடுக்கும் பழங்களுக்கேற்ப அபரிமிதமான உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் சக்தியை உள்ளடக்கியுள்ளன. பழ பானங்கள் புத்துணர்ச்சி அளிப்பதுடன் அதிக சத்துக்களையும் கொண்டவை. இவை திரவம் உட்கொள்ளும் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

பழ ஸ்குவாஷ்கள் (Squash) சர்க்கரை பாகையும், பழச்சாற்றையும் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இவைகளை நீண்ட நாள் கெடாமல் வைத்து கொள்ள முடியும். புத்துணர்ச்சி தேவைப்படும்போது, உடனடியாக நீருடன் கலந்து அருந்துவதற்கு ஏற்றது.

பழத்தின் கூழ் (Pulp), சர்க்கரை மற்றும் பாலை ஒன்றாக சேர்த்து கலக்கும் போது பால்பழ கலவை (Milk shake) கிடைக்கின்றன. உதாரணமாக ஆப்பிள், மாம்பழம், சப்போட்டா போன்றவைகளை உபயோகித்து ஷேக்குகள் தயாரிக்கலாம்.

பால் பானங்கள்

பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி (Strawberry), ஏலக்காய், சாக்லெட் போன்ற பலவிதமான வாசனைப் பொருட்களை (Essence) பாலுடன் கலந்து தயாரிக்கப்படும் பானங்கள் ஆகும். இவை பாலிற்கு விரும்பத்தக்க நறுமணத்தை தருவதால், அதிக அளவில் உட்கொள்ள இயலுகிறது. குறிப்பாக, குழந்தைகள் விரும்பி உண்பர். பால் பானங்கள் புரதம், கால்சியம், உயிர்ச்சத்து A மற்றும் B யை அதிக அளவில் கொண்டது. பழத்தின் சதைப்பகுதி சர்க்கரை மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படுவது பால் ஷேக்காகும். பாலையும் முட்டையும் சேர்த்து முட்டை நாக் (Egg nog) தயாரிக்கலாம். இது பால் ஏட்டின் மிருதுவான தன்மையுடைய சத்தான பானமாகும்.

கார்பன்-டை-ஆக்ஸைடு ஏற்றப்பட்ட மது அல்லாத பானங்கள்

பொதுவாக கார்பன்-டை-ஆக்ஸைடு ஏற்றப்பட்ட மது அல்லாத பானங்கள் இனிப்பு சுவை ஊட்டப்பட்டதாகவும், நறுமணம் கொண்டதாகவும் அமிலத்தன்மையுடனும், செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டதாகவும் இருக்கும். இப்பானங்களில் நீர் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவ்வகை பானங்களில் 92% வரை நீர் இருக்கும். 8 லிருந்து 14% சர்க்கரை உள்ளதால் இனிப்பு சுவையுடையதாக இருப்பதுடன் சக்தியையும் தருகின்றது.

செயற்கை இனிப்பூட்டியான சாக்கரினும் பயன்படுத்தப் படலாம். இதனுடன் கார்பன்-டை-ஆக்ஸைடு சேர்க்கப்படுவதால் விறுவிறுப்பான தன்மை கொண்டதாகவும் பிரகாசமான நுரைகள் பொங்கி எழும்பும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். சத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டால், இவ்வகை பானங்களில் கலோரிகளைத் தவிர சத்துக்கள் ஏதும் இல்லை.

ஒரு பாட்டில் கார்பன்-டை- ஆக்ஸைடு ஏற்றப்பட்ட பானம் (180மி.லி) 70 கிலோ கலோரிகளைத் தருகிறது. இதனுடன் பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பியுமாரிக் அமிலம், மற்றும் டார்டாரிக் அமிலம் போன்றவை பானத்தின் மணத்தை அதிகரிக்கவும் அமிலத்தன்மையுள்ளதாக மாற்றவும் சேர்க்கப்படுகிறது. எனவே இவ்வகை பானங்கள் வயிற்றில் குடல்புண் மற்றும் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உகந்ததன்று. புற்று நோயை உண்டாக்குவதாக சந்தேகிக்கப்படும் சாக்ரினும் இவ்வகை பானங்களில் சேர்க்கப்படுகிறது. காற்று ஏற்றப்பட்ட பானங்களில் எவ்வித சத்துக்களின் மதிப்பு இல்லாமையால், இதனை அருந்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பசியுணர்ச்சியை கட்டுப்படுத்துவதால் குழந்தைகள் உட்கொள்வது வரவேற்க தக்கதன்று.

முளைகட்டிய (Malted) உணவுகளிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள்

முளைகட்டிய உணவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பானங்களுக்கு அமிலேஸ் செறிந்த உணவு (ARF-Amylase Rich Foods) என்று பெயர். கேழ்வரகு அல்லது கோதுமை போன்ற முழு தானியங்களை அதன் அளவில் 2 முதல் 3 பங்கு நீரில் ஊற வைக்க வேண்டும். தானியங்கள் ஊறிய பின்னர் தேவைக்கு அதிகமான நீரை வடிகட்டி, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முளை கட்டுமாறு செய்ய வேண்டும். அதிலுள்ள ஈரப்பசையை நீக்குவதற்காக வெயிலில் நன்கு உலர்த்திய பின் வறுக்க வேண்டும். பின்பு இதனை இயந்திரங்களின் உதவியால் பொடியாக்கி கொள்ள வேண்டும். இப்பொடியினை தண்ணீர் அல்லது பாலுடன் கொதிக்க வைத்து சத்துமிக்க பானமாக அருந்தலாம். இதுவே மால்ட் பானங்கள் ஆகும்.

ARF (அமிலேஸ் செறிந்த உணவு) என்பது அமிலேஸ் நொதிகள் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகும். முளை கட்டுதல் செயலினால் விதைகளில் உள்ள நொதிகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி, அதன் மாவுச் சத்துக்களை நொதித்த சர்க்கரையாக மாற்றம் அடையச் செய்கிறது. இவ்வுணவுகளிலுள்ள தானியப் புரதம், நீராற்பகுக்கப் (Hydrolysis) படுகிறது.

சூப்புகள் (SOUPS)

சூப்புகள் காய்கறிகள், பருப்புகள், கோழி இறைச்சி மற்றும் மாமிசத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சூப் தயாரிப்பதற்கு உணவுப் பொருட்களை அதிக அளவு நீரில் நன்கு வேக வைக்க வேண்டும். தெளிந்த சூப்புகள் உணவுப் பொருட்களை தண்ணீரில் சமைப்பதால் கிடைப்பவையாகும். மிருதுவான ஏடு படிந்த (Cream) சூப்புகளை தயாரிக்க உணவுப் பொருட்களை நீரில் வேகவைத்து பால் அல்லது வெள்ளை சாஸ் (White Sauce) சேர்க்க வேண்டும்.

சூப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை பொறுத்து சத்துக்கள் அதிகமாகும் அல்லது குறையும். சூப்புகள் பசியைத் தூண்டும். உணவு தயாரிப்பில் பல நிறங்களைக் கொண்ட உணவு வகைகளைத் தயாரிக்கவும் உதவும். இது பொதுவாக, உணவு உண்பதற்கு முன்பாக பரிமாறப்படுவதாகும்.

பண்டைய பானங்கள்

பதனீர்

பனைமரத்தின் குருத்தை சீவுவதால் அதிலிருந்து பனஞ்சாறு வடியும். இது புத்துணர்ச்சியூட்டும் இனிய பானமாகும்.

இளநீர்

இந்த புத்துணர்ச்சி அளிக்கும் பானம், தென்னை மரத்தின் முதிர்ச்சியடையாத தேங்காயிலிருந்து கிடைக்கின்றது. இதில் பொட்டாசியம், அஸ்கார்பிக் அமிலம், B வகை ஊட்டச்சத்தின் கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளன. இதைத் தவிர இளநீரில் சிறிதளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது.

கரும்பு சாறு

கரும்பு சாற்றில் 12 முதல் 15 சதவீதம் சர்க்கரை உள்ளது. இது அமிலத்தன்மையுடையது. இதில் தாது உப்புகளும், B பிரிவை சேர்ந்த உயிர்ச்சத்துக்களும் உள்ளன.

பானகம்

பானகம் என்பது பாரம்பரியமான பானமாகும். இது வெல்லம், இஞ்சி, மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் பானமாகும்.

- தகவல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்