இந்தியாவுக்கு 'கூகுள், மைக்ரோசாப்ட்' உதவி
- Get link
- X
- Other Apps
ஹூஸ்டன் :
கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு உதவுவதாக, 'கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்' நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. போதிய ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், சென்னையைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தி:இந்தியாவில், கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்பு அதிர்ச்சி அளிக்கிறது. கூகுள் மற்றும் கூகுள் பணியாளர்கள் சார்பில், மருந்துகள் சப்ளை செய்யவும், பாதிப்பு அதிகமுள்ளோருக்கு உதவவும், இந்தியா மற்றும் ஐ.நா., சிறார் நல நிதியத்திற்கு, 130 கோடி ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, ஐதராபாத்தைச் சேர்ந்தவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சத்ய நாதெள்ளா கூறியிருப்பதாவது:இந்தியாவில், கொரோனாவின் கோரத் தாண்டவம் பார்த்து, என் நெஞ்சு வெடித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் திறன், வளம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி, நிவாரண உதவிகளையும், ஆக்சிஜன் சிலிண்டர்களையும்,இந்தியாவுக்கு வழங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மக்களுக்குத் தேவையான உயிர் காக்கும்
மருந்துகள், சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளனர். ''கொரோனாவை சமாளிக்க முடியாமல், அமெரிக்க மருத்துவமனைகள் திணறிய போது, இந்தியா உடனடியாக மருந்துகளை அனுப்பியது. ''அதனால், இந்தியாவுக்கு தற்போது உதவ முடிவு செய்துள்ளோம்,'' என, ஜோ பைடன் கூறியுள்ளார்.
இந்திய மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், கூடுதல் உதவிகள் வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுடன், அமெரிக்க அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர், சார்லஸ் மைக்கேல் உள்ளிட்டோரும், இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஒளிர்ந்த இந்திய தேசிய கொடி
மேற்கு ஆசியாவைச் சேர்ந்த, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், உலகின் உயரமான, 'புர்ஜ் கலிபா' கோபுரம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள், இந்திய தேசிய கொடியின் மூவர்ண மின் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு, தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ALSO READ : இந்தியர்களுக்கு ஆக்சிஜன் வாங்குங்கள்.. பிஎம் கேர்ஸ்-க்கு 50000 டாலர் நன்கொடை - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment