பலூன்கள் நவீன கண்டுபிடிப்பு போல நமக்கு தோன்றலாம், ஆனால் அவை பல நூற்றாண்டுகள் முன்பே இருந்திருக்கின்றன.
முதல் ரப்பர் பலூனை ‘மைக்கேல் பாரடே’, 1824-ல் கண்டுபிடித்தார். அவர் லண்டனில் உள்ள ‘ராயல் இன்ஸ்டிடியூட்டில்’ தமது ஹைட்ரஜன் பரிசோதனையில் அவற்றைப் பயன்படுத்தினார். இதே ரப்பர் பலூனை ஒரு வருடம் கழித்து அதாவது 1825-ம் ஆண்டில் அந்நாளில் முன்னோடி ரப்பர் உற்பத்தியாளரான ‘தாமஸ் ஹான்காக்’ என்பவர் பாட்டிலில் இணைக்கும் படியான சுருங்கி விரியும் சிரன்ஞ் போல் உருவாக்கி விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
1847-ல் லண்டனில் முதன்முறையாக ‘லேடக்ஸ்’ பலூன்களை இங்க்ராம் என்பவர் தயாரித்து வெளியிட்டார். ஆனாலும் அவரால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பெரிய அளவில் உற்பத்தியை பெருக்கமுடியவில்லை. 1970-ம் ஆண்டில் ஃபாயில் பலூன்கள் வெளிவந்தன. அவற்றின் விலை அதிகமாக இருந்தாலும், ரப்பர் மற்றும் ‘லேடக்ஸ்’ பலூன்களை விட அதிகமாக காற்று அல்லது வாயுவை தன்னுள் புகுத்தக் கூடிய வகையில் அமைந்திருந்தது. மேலும் அவை இலகுவாகவும் இருந்தது
இன்று, பலூன்கள் ரப்பர், லேடக்ஸ் அல்லது நைலான் துணி ஆகியவற்றில் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இவற்றால் நமக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இவை பல வண்ணங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. பலூனின் அளவுகள் பொதுவாக 10 முதல் 30 சென்டிமீட்டர் வரை வேறுபடுகின்றன. ஆனால் அளவோ அல்லது வடிவமென்பதோ இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தேவைக்கு ஏற்ப எந்த அளவிலும் அல்லது வடிவத்திலும் தயாரிக்க முடியும். பொம்மை பலூன்களுக்கு அதனுள் வாயு செலுத்துவதற்காக ஒரு வாயில் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு பலூனை நமது வாய் கொண்டு ஊதி அதனுள் காற்றை செலுத்தி பெரிதாக்கலாம். ஒரு வேளை அதிக அளவில் பலூன்கள் இருந்தால் காற்றை செலுத்தும் பம்ப் மூலமாகவோ, வாயுவை செலுத்தும் வேறு ஒரு முறையிலோ அதனுள் காற்றை நிரப்பிவிடலாம்.
காற்றிற்கு பதில், அதை விட எடை குறைவுள்ள வாயுவை பயன்படுத்தினால் (உதாரணம் ஹீலியம் வாயு), அந்த பலூன் காற்றின் மேலே பறந்து விடும். மேலும் ஹீலியம் போன்ற வாயுவை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் அவைகளில் எளிதில் தீ பற்றாது. மேலும் இந்த வாயு விஷத்தன்மை அற்றது. அவற்றை நமது நாசிகளில் நுகர்ந்தாலும் நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
ரப்பர் பலூன்களில் தண்ணீரையும் ஊற்றி வைக்கலாம். அவற்றை ‘தண்ணீர் பலூன்கள்’ என அழைப்பார்கள். இந்த வகையான பலூன்கள் வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொள்ளும் ஹோலி முதலான கொண்டாட்ட விழாக்களில் பயன்படுத்துகிறார்கள்.
Comments
Post a Comment