ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என பேட் கம்மின்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வடஇந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தலைநகர் டெல்லியே தவித்தது. தனியார் மருத்துவமனை ஒன்று உயர் நீதிமன்ற வாயிலை தட்டியது.
ஆக்சிஜன் இல்லையென்றால் இங்கு நோயாளிகளின் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது. தயவு செய்து மத்திய அரசை ஆக்சிஜனை வழங்கச் சொல்லுங்கள் என நீதிமன்றத்தில் மன்றாடியது. மக்களுக்கு தேவையானதை வழங்குவது அரசின் கடமை. நீங்கள் திருடுவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, கடன்வாங்குவீர்களோ அது தெரியாது. மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குங்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக சாடியது. இந்தியாவின் நிலை அறிந்து உலக நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். ஆக்சிஜனை வாங்கி சப்ளை செய்வதற்காக, பிரதமர் கேர்ஸ்-க்கு 50,000 டாலரை நன்கொடையாக வழங்குவதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய மக்களிடம் இருக்கு அன்பும் கனிவும் நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த நேரத்தில் ஐபிஎல் நடக்கலாமா கூடாது என விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த அரசாங்கத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த கடுமையான ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும்.
இந்தியாவுக்கு இது கடுமையான காலம்தான். இந்திய மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக 50000 டாலர்களை பிரதமர் கேர்ஸ்-க்கு நன்கொடையாக வழங்குகிறேன். ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment