பழைய பிரெஷ்ஷில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளர்ந்து விட்ட பிறகு, அதைக்கொண்டு உங்கள் பற்களை நீங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன், குறிப்பாக அது ஒரு உணவுப் பொருளாக இருக்கும்போது அதன் காலாவதி தேதியை (expiry date) சரி பார்ப்பர். காலாவதி தேதி என்பது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை இதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்கிற தேதியைக் குறிக்கிறது; இந்த தேதிக்குப் பிறகு அதை உட்கொள்வது ஆபத்தானது. இதுபோல காலாவதியாகும் தேதியை மட்டுமல்ல, உற்பத்தி தேதி மற்றும் குறிப்பிட்ட தயாரிப்பு முன்வைக்கும் நிபந்தனைகளையும் நாம் சரிபார்க்கும் பழக்கத்தினை கொண்டுள்ளோம்.
ஆனால் தினமும் நாம் நமது வாய்க்குள் அனுப்பும் ஒரு "மேட்டரின்" காலாவதி தேதியை பற்றி நீங்கள் கவலைப்பட்டது உண்டா? யோசித்தது உண்டா? அதாங்க.. பற்களை சுத்தம் செய்வதற்காக நாம் தினமும் வாய்க்குள் வைக்கிறோமே டூத் பிரஷ், அதற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா என்று நீங்கள் யோசித்தது உண்டா?
நம்மில் பலரும் மார்க்கெட்டில் வாங்க கிடைக்கும் ஏதேனும் ஒரு டூத் பிரெஷை வாங்கி அதன் ப்ரிசில்கள் (முள் போன்ற இழைகள்) முழுவதுமாக சேதமடையும் வரை பயன்படுத்தும் வழக்கத்தினை / பழக்கத்தினை கொண்டுள்ளோம். இந்த இடத்தில் தான், ஒரு டூத் பிரெஷ்ஷை எப்போது, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? அது ஏன் அவசியம்? மாற்றவில்லை என்றால் என்ன ஆகும்? என்கிற நிபுணர்களின் அட்வைஸ் நமக்கு தேவைப்படுகிறது.
கலிபோர்னியாவில் உள்ள 'டென்டல் பார்' ஆன ஃபுருமோட்டோ டென்டிஸ்ட்ரியில் உள்ள பல் மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒரு டூத் பிரஷ் உடன் தொகுக்கப்பட்ட கால அளவு எதுவும் இல்லை என்றாலும் கூட ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு நபர் தனது டூத் பிரெஷ்ஷை மாற்ற வேண்டும். உண்மையிலேயே எந்தவொரு டூத் பிரெஷ்ஷிற்கும் எந்தவிதமான காலாவதி தேதியும் கிடையாது. ஆனால் நீங்கள் அதைத் திறந்து பயன்படுத்தத் தொடங்கியவுடன், உங்கள் டூத் பிரெஷ்ஷின் வாழ்க்கை சுழற்சி 3 முதல் 4 மாதங்கள் வரை மட்டுமே ஆகும். அதற்கு பிறகு, குறிப்பிட்ட டூத் பிரெஷ்ஷால் பல் துலக்கினாலும் கூட அது உங்கள் பற்களை சரியாக சுத்தம் செய்யாது.
மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, காலாவதியான பிரஷ்ஷைப் பயன்படுத்துவதில் பல தீமைகளும் உள்ளன.
நீங்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஒரு டூத் பிரெஷ்ஷை பயன்படுத்தினால் என்ன ஆகும்..?
- பழைய பிரெஷ்ஷில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளர்ந்து விட்ட பிறகு, அதைக்கொண்டு உங்கள் பற்களை நீங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
- பழைய பிரெஷ்ஷால் உங்கள் பற்களில் படிந்துள்ள பிளேக்கை அகற்ற முடியாது. உங்கள் டூத் பிரெஷ் எவ்வளவுக்கு எவ்வளவு தேய்மானம் அடைகிறதோ அந்த அளவிற்கு அது பிளேக்கை அகற்றுவதில் திறமையற்றதாக மாறும்.
- உங்கள் பழைய பிரெஷ்ஷால் பிளேக்கை சுத்தம் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், உங்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும்.
மேற்கண்ட புள்ளிகள் நீங்கள் பயன்படுத்தும் டூத் பிரெஷ்ஷை மாற்ற வேண்டும் என்பதற்கான சமிக்ஞைகளையும் வழங்கும். டூத் பிரெஷ்ஷின் "முட்கள்" கண்டபடி பரவி அதன் கீழே கருப்பு புள்ளிகள் உள்ளன என்றால், அதுவும் உங்கள் டூத் பிரெஷ்ஷை மாற்ற வேண்டும் என்கிற அறிகுறிகளில் ஒன்றாகும்.
Comments
Post a Comment