சீனாவின் சில பகுதிகளில் கடந்த 3000 ஆண்டுகளாக "பேய் திருமணம்" என்கிற நம்பிக்கை, வழக்கம் நீடித்து வருகிறது.
இந்த வயதிற்கு மேலேயும் "சிங்கிள்டா... கெத்துடா..." என்று சுற்றிக்கொண்டு இருந்தால் கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாது என்கிற பீதி லேசாக எட்டிப்பார்க்க தொடங்கியதும் திருமணமாகாத பெரும்பாலானோர்கள் வந்து நிற்கும் ஒரு இடம் - மேட்ரிமோனியல் ஆப்ஸ் மற்றும் வெப்சைட்களே ஆகும்.
என்னதான் டீடெயில் ஆக ப்ரொபைல் அனுப்பி, ஜாதகம் பார்த்து, 10 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்து கொண்டாலும் கூட புரிதல், நேசிப்பு, விட்டுக்கொடுத்தல், பகிர்தல், குறைகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற "சமாச்சாரங்கள்" உங்கள் இல்லற வாழ்க்கையில் இல்லை என்றால்... "உன்னை கல்யாணம் பண்ணதுக்கு பதிலா ஒரு பேயை கல்யாணம் பண்ணி இருக்கலாம்!" என்கிற டயலாக்கை நீங்கள் சொல்ல வேண்டிய நிலையோ அல்லது கேட்க வேண்டிய நிலையோ ஏற்படலாம்!
என்னப்பா ரொம்ப பயமுறுத்துறீங்க... இதெல்லாம் நமக்கு செட் ஆகாது. நான் கடைசி வரைக்கும் சிங்கிள் ஆகவே வாழ்ந்துடுறேன் என்பவர்கள் தயவு செய்து சீனா பக்கம் சென்றுவிட வேண்டாம். ஏனெனில் நீங்கள் சிங்கிள் ஆகவே வாழ்ந்து செத்தாலும் கூட.. உங்களுக்கு கல்யாணம் செய்து வைக்காமல் விடாத "பேய் திருமணம்" என்கிற ஒரு விசித்திரமான வழக்கம் அங்கே உள்ளது.
ஆம்! சீனாவின் சில பகுதிகளில் கடந்த 3000 ஆண்டுகளாக "பேய் திருமணம்" என்கிற நம்பிக்கை, வழக்கம் நீடித்து வருகிறது. அதாவது, ஒருவர் திருமணம் ஆகாமலேயே இறந்து விட்டார் என்றால், அவருக்கும் அவரை போலவே திருமணம் செய்து கொள்ளாமல் மரணத்தை தழுவிய இன்னொருவருக்கும் செய்து வைக்கப்படும் திருமணமே - பேய் திருமணம் ஆகும். இப்படி செய்வதன் வழியாக ஒருவர் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையில் தனிமையில் வாட மாட்டார் என்று சீனர்கள் நம்புகிறார்கள்.
அதெப்படி ஒரே நேரத்தில் 2 திருமணம் ஆகாதவர்களின் சடலங்கள் கிடைக்கும்? எப்படி இந்த திருமணம் சாத்தியமாகும்? என்று குழப்பம் அடைய வேண்டாம். திருமணம் ஆகாமல் இறந்து போன ஒரு "மணமகளின்" எலும்புகளை தோண்டி எடுத்து "மணமகனின்" கல்லறையில் வைப்பதே - பேய் திருமணம் ஆகும். அதாவது யார் எப்போது வேண்டுமானாலும் இறந்து இருக்கலாம்; ஆனால் இந்த பேய் திருமணத்திற்கு, திருமணம் ஆகாமல் இறந்து போன ஒரு பெண்ணின் எலும்புகள் தேவை; இங்கே தான் சிக்கல்களும் ஆரம்பிக்கிறன.
ஏனெனில் ஆரம்ப காலத்தில், இந்த நடைமுறை "கண்டிப்பாக" இறந்தவர்களுக்காக மட்டுமே என்கிற நிலை இருந்தது, ஆனால் சமீப காலங்களாக, உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்தவருக்கு ரகசிய முறையில் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து ஷாங்காய் பல்கலைக்கழக சீனத் துறைத் தலைவர் ஹுவாங் ஜிங்சுன் கூறுகையில், "மணப்பெண்ணின்" எலும்புகளின் விலை, குறிப்பாக இளமையாக இருந்தால், விலை மிகவும் உயர்ந்துள்ளது. அவரது ஆராய்ச்சியின்படி, இப்படியான எலும்புகள் 30,000 முதல் 50,000 யுவான்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. சில நேரங்களில் இந்த விலைகள் 100, 000 யுவான் வரையும் கூட செல்லுமாம்.
இதுபோல சடலங்களை விற்பனை செய்வது கடந்த 2006 ஆம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டு விட்டாலும் கூட இதை ஒரு வியாபாரமாக செய்யும் "கல்லறைக் கொள்ளையர்கள்" இதன் மூலம் வரும் பணத்திற்காக பெண்களை கொலை செய்யும் சம்பவங்களும் கூட நடந்துள்ளது.
Comments
Post a Comment