ஜப்பானில் உப்பு சப்பில்லாத உணவை கூட சுவையாக மாற்றக்கூடிய ‘ஸ்மார்ட் சாப் ஸ்டிக்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜப்பானியர்கள் தங்களது உணவு பழக்கத்தைப் பொறுத்தவரை எப்போதுமே பாரம்பரிய முறையை கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியர்களான நாம் எப்படி கையில் உணவு உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளோமோ, அதேபோல் ஜப்பானியர்கள் சாப் ஸ்டிக் எனப்படும் குச்சியைப் பயன்படுத்தி உணவு உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுவரை சாப்பிட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சாப் ஸ்டிக் இனி உணவின் சுவையையும் மாற்றக்கூடிய கருவியாக மாறியுள்ளது.
‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்பார்கள் ஆனால் ஜப்பானியர்கள் அநியாயத்திற்கு தங்களது பாரம்பரிய உணவில் உப்பை அதிகமாக சேர்த்துச் சாப்பிடுகின்றனர். ஜப்பானின் பாரம்பரிய உணவுகள் அனைத்திலும் உப்பு சற்று தூக்கலாகவே இருக்குமாம். இது ஜப்பானியர்களுக்கு ஓ.கே. என்றாலும், அங்கு வரும் பிற நாட்டவர்களின் நிலை பரிதாபம் தான். மேலும் அதிக உப்பு சாப்பிடுவது உடலுக்கு மிகப்பெரிய கேடு தரக்கூடியது. இதையெல்லாம் யோசித்த ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எலெக்ட்ரிக் சாப் ஸ்டிக் ஒன்றினை கண்டுப்பிடித்துள்ளனர்.
ஜப்பனீஸ் ஆராய்ச்சியாளர்கள் எலெக்ட்ரிக் சாதனத்துடன் பொருத்தப்பட்ட சாப் ஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர். அந்த சாப் ஸ்டிக் மூலம் சாப்பிடும் போது மின் தூண்டுதல் நுட்பம் மூலம் உணவில் உப்பு சுவை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாட்டின் மிகவும் பிரபலமான சில உணவுகளில் சோடியம் அளவைக் குறைக்கும் முக்கிய முயற்சியாக இந்த கண்டுபிடிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உணவின் சுவையை அதிகரிக்க கூடிய இந்த புதிய சாப் ஸ்டிக், மீஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹோமி மியாஷிதா மற்றும் பானங்கள் தயாரிப்பாளரான கிரின் ஹோல்டிங்ஸ் கோ ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த சாப்ஸ்டிக்ஸ் மின் தூண்டுதல் மற்றும் மணிக்கட்டில் அணிந்திருக்கும் மினி- கம்யூட்டரைப் பயன்படுத்தி சுவையை மேம்படுத்துகிறது. சாதனம் பலவீனமான மின்னோட்டத்தைப் பயன்படுத்தி உணவில் இருந்து சோடியம் அயனிகளை, சாப்ஸ்டிக்ஸ் வழியாக வாய்க்கு அனுப்புகிறது, அங்கு அவை உப்புத்தன்மையை உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர் மியாஷிதா தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, உப்பு சுவை 1.5 மடங்கு அதிகரிக்கும். மியாஷிதாவும் அவரது குழுவினரும் ஆய்வகத்தில் மனித உணர்வை தூண்டும் வகையிலான கருவியை கண்டறிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் நாவால் நக்குவதன் மூலமாக பல்வேறு உணவின் சுவைகளை உணரக்கூடிய டி.வி. திரையையும் உருவாக்கியுள்ளனர்.
ஜப்பானியர்கள் சாப்பிடும் பாரம்பரிய உணவு வகைகள் பலவும் உப்புச்சுவை நிறைந்தவையாக உள்ளன. சராசரி ஜப்பானியர்கள் ஒரு நாளைக்கு சுமார் 10 கிராம் உப்பை உட்கொள்வதாக கூறப்படுகிறது. இது உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். எனவே உப்பை அதிகமாக உண்பதால் ஜப்பானியர்களின் உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை சரி செய்யவே, இந்த எலெக்ட்ரிக் சாப் ஸ்டிக்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Comments
Post a Comment