ரோபோக்கள், சென்சார்கள் உள்ளிட்டவை 5ஜி மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை வசதியை, ஹைதராபாத் நகரத்தில் செயல் விளக்கமளித்துக் காட்டி இருப்பதாக தன் வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறது.
டைனமிக் ஸ்பெக்ட்ரம் ஷேரிங் மூலம், முதல் முறையாக, ஒரே அலைக்கற்றை தொகுப்புக்குள் (Spectrum Block) நான்காம் தலைமுறை மற்றும் ஐந்தாம் தலைமுறை சேவைகளை தடையின்றி வழங்கியுள்ளதாக ஏர்டெல் கூறுகிறது.
சரி 5G என்றால் என்ன?
சுருக்கமாக 5G என்பது அடுத்த தலைமுறை மொபைல் இணைய சேவை. தற்போது இருக்கும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை (upload & download speed) விட கூடுதல் வேகத்தில் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.
ரேடியோ அலைவரிசையை பெரிய அளவில் பயன்படுத்துவதால், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சாதனங்களை மொபைல் இணையத்தில் இணைத்துப் பயன்படுத்த முடியும்.
5G வந்தால் என்ன பயன்?
இந்த அதிவேக இணையம் நடைமுறைக்கு வந்தால், நேரடியாக காணும் பொருள்களுக்கு வரைபடம், ஒலி உள்ளிட்டவற்றை முப்பரிணாமத்தில், நிகழும் நேரத்திலேயே இணைத்துக் காட்டும் இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality), கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை நேரில் இருக்கும் உண்மையான உருவம் போலவே காட்டும் மெய்நிகர் உண்மை (Virtual reality) போன்றவற்றை பயனர்கள் அனுபவிக்க முடியும்.
ஓட்டுநர் இல்லாத கார்கள் 5ஜி மூலம் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளலாம்.
5G-யின் வேகம் எவ்வளவு?
தற்போதைய நான்காம் தலைமுறை இணையத்தின் வேகம் சராசரியாக நொடிக்கு 42 மெகா பைட்-ஆக இருக்கிறது. ஆனால் தொலைத் தொடர்புத் துறையினரோ நொடிக்கு 1 ஜிகா பைட் வேகம் வரை தொடலாம் என்கிறார்கள்.
ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை மூலம் தற்போது இருக்கும் இணைய வேகத்தை விட 10 முதல் 20 மடங்கு அதிக வேகத்தில் இணைய சேவையைப் பெறலாம் என்கிறது க்வால்காம் நிறுவனம். இதனால் ஒரு ஹெச்.டி சினிமா படத்தைக் கூட ஒரு நிமிடத்துக்குள் சட்டென பதிவிறக்கம் செய்துவிடலாம்.
இந்தியாவில் 5G அலைக்கற்றை?
வரும் மார்ச் 01-ம் தேதி முதல் 3.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரேடியோ அலைக்கற்றைகளை ஏலம் விட இருக்கிறது இந்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராய். (TRAI)
ஆனால் இந்த ஏலத்தில் 3,300 - 3,600 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலத்தில் விட வில்லை. இந்த அலைக்கற்றைதான் 5G சேவைக்கு அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment