இரும்பு பாத்திரங்களில் சமைத்தல் ஹீமோகுளோபினை அதிகரிக்குமா? நிபுணர் விளக்கம்
- Get link
- X
- Other Apps
இரும்பு பாத்திரங்களில் சமைத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குகிறார் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர்.
நம் முன்னோர்கள் ஆரோக்யமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்ததற்கு உணவு மற்றும் உடலுழைப்பு மட்டுமன்றி, அவர்கள் மண், கற்கள் மற்றும் இரும்பாலான பாத்திரங்களை பயன்படுத்தி சமைத்ததும் ஒரு காரணம்தான். குறிப்பாக இரும்பு பாத்திரங்கள் தற்போது பயன்படுத்துகிற நான்ஸ்டிக் பாத்திரங்களைவிட ஆரோக்கியமானது. காரணம் இரும்பு பாத்திரங்கள் உடலிலுள்ள இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அனீமியா போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கும் என்கிறார் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர்.
இரும்பு பாத்திரங்களின் முக்கியத்துவம்
உடல் எடை கூடியது முதல் தூக்கம் கெட்டதுவரை நம் வாழ்க்கைமுறை முற்றிலுமாக மாறியதற்கு இந்த பொதுமுடக்கம்தான் முக்கிய காரணம். இவை அனைத்தும் சேர்ந்து பெரும்பாலானவர்களுக்கு வயதான தோற்றத்தை உருவாக்கிவிட்டது. மேலும் இந்த பொதுமுடக்கம் உடலின் ஆக்ஸிஜன் அளவின் முக்கியத்துவத்தையும் உணர்த்திவிட்டது. மற்றொரு பக்கம் எட்டு, ஒன்பது வயது குழந்தைகளுக்குக்கூட தலைமுடி நரைக்க ஆரம்பிக்கவிட்டது. இதுதவிர குழந்தையின்மை, பிசிஓஎஸ் மற்றும் தைராய்டு போண்ற பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதுபோன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் பொதுவான காரணம் மைக்ரோ ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடுதான். இதற்கு இரும்பு பாத்திரங்களில் சமைப்பது ஒரு தீர்வாக அமையும் என்கிறார் ருஜுதா.
- உடலில் தேவையான ஹீமோகுளோபின் இருந்தாலே உடல் மற்றும் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்.
- உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பதுகூட தினசரி உடற்பயிற்சி செய்தாலும் அதன் பலன் கிடைக்காததற்கு முக்கிய காரணம்.
- ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால் எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். இது மனநல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.
- கருத்தரிப்பு சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு, வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்னை இருப்பவர்களுக்கு, நீரிழிவு மற்றும் பிசிஓடி பிரச்னை இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும்.
- ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் முடி உதிர்வு தடுக்கப்படுவதோடு, அடர்த்தியான முடியும் கிடைக்கும்.
இதற்கு இரும்பு பாத்திரங்களில் சமைப்பது மட்டுமே தீர்வாக அமையும் என்று நினைத்துவிடக்கூடாது. இரும்பு பாத்திரங்கள் இரும்புச்சத்து உடலில் சேருவதற்கும், ஆரோக்யம் மேம்படுவதற்கும் உதவும். அதேபோல் சமைக்கும் உணவின் அளவிற்கு ஏற்றவாறு பாத்திரத்தின் அளவும் இருப்பது சிறந்தது.
உணவு பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், அதீத குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது என்கிறார் ருஜுதா.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment