மரத்தை வெட்டாமல் வளர்த்தால் வட்டியில்லா கடன் உண்டு - கலக்கும் கேரள பஞ்சாயத்து!
- Get link
- X
- Other Apps
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி பஞ்சாயத்தில் மரங்களை வெட்டாமல் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் கொடுத்து அசத்துகிறது அந்த ஊரை சேர்ந்த பஞ்சாயத்து. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது 75 செண்டுள்ள நிலத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்தமைக்காக 5000 ரூபாய் பெற்றுள்ளார் 83 வயதான விவசாயி மாதவன். இதை அந்த பஞ்சாயத்தின் மரங்களின் வங்கி (Tree Banking) திட்டம் மூலம் பெற்றுள்ளார் அவர். மரங்களை அவர் வெட்டாமல் இருந்தால் அந்த ஐயாயிரம் ரூபாயை கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என பஞ்சாயத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மூன்று வருடத்துக்கு முன்பு பலா, மருது, மகோகனி மற்றும் சில வகையான மரக்கன்றுகளை பஞ்சாயத்து உறுப்பினர்கள் என்னிடம் கொடுத்திருந்தனர். அந்த மரங்களை வெட்டாமல் மூன்று வருடத்துக்கு பத்திரமாக வளர்த்தால் ஒரு மரத்திற்கு 50 ரூபாய் வீதம் வட்டியில்லா கடன் கொடுக்கப்படும் எனவும் சொன்னார்கள். மேலும் 10 ஆண்டுகள் அதை வெட்டாமல் இருந்தால் நான் வாங்கிய கடன் தொகையை கொடுக்கவே வேண்டாம் என சொன்னார்கள். அதன்படி நானும் வளர்த்தேன். கடந்த அக்டோபரில் எனக்கு கொடுக்க வேண்டிய முதல் தவணை தொகையை கொடுத்தார்கள்” என சந்தோஷமாக சொல்கிறார் மாதவன்.
அதே வார்டை சேர்ந்த 28 வயதான விவசாயி பிரமீஷ் பிரகாஷ் “பஞ்சாயத்தின் திட்டம் குறித்து தெரிந்து கொண்டதும் நானும் அதில் ஆர்வமாக இணைந்து கொண்டேன். அவர்கள் கொடுத்த மரம் மட்டுமல்லாது நானும் கொஞ்சம் மரக்கன்றுகளை எனது தோட்டத்தில் வைத்து மூன்று ஆண்டுகள் வளர்த்தேன். பஞ்சாயத்து உறுப்பினர்கள் எனது தோட்டத்திற்கு வந்து மரங்களின் வளத்தை பார்த்ததோடு அதற்கு நம்பர் இட்டுள்ளனர். அதோடு எனது வங்கி கணக்கு விவரங்களையும் வாங்கி சென்றுள்ளனர். விரைவில் முதல் தவணை தொகையை பெறுவேன்” என்கிறார்.
கார்பன் சமநிலை மீனங்காடி
இந்த மரங்களின் வங்கி திட்டம் மீனங்காடி பஞ்சாயத்தில் கார்பன் சமநிலையை உருவாக்கும் தொலைநோக்கு திட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2015இல் பாரீசில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை அடிப்படையாக வைத்து இந்த ஐடியா கொண்டு வரப்பட்டுள்ளது. 2016இல் கேரளா நிதி துறை அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் இரண்டு தன்னார்வ குழு உறுப்பினர்களும் இணைந்து வயநாட்டில் கார்பன் சமநிலையை கொண்டு வரும் நோக்கில் மீனங்காடி பஞ்சாயத்தை தேர்வு செய்துள்ளனர்.
Dr. Thomas Isaac, Finance Minister of Kerala, inaugurated the Tree banking scheme at Meenangadi Panchayath, Wayanad .
வயநாடு பகுதி காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதை கண்டு இந்த திட்டம் அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் இருப்பதும் இந்த திட்டத்தை அங்கு கொண்டு வர காரணம். உலக சுற்றுச்சூழல் தினமான 2016 ஜூன் 5 அன்று இந்த திட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதை கவனித்துக் கொள்ளும் பணியை தன்னார்வ அமைப்பினர் ஏற்றுள்ளனர்.
“பசுங்குடில் வாயுக்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முதலில் ஆய்வை தொடங்கினோம். இதில் மாணவர்கள், பெண்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு ஆண்டு காலம் இந்த ஆய்வு நடந்தது. முடிவில் 33375 டன்னாக உள்ள பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வை 15000 டன்களாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க என்ன செய்யலாம் என யோசித்தோம். அதற்கு ஒரு டைம்லைனும் வைத்தோம். அதன் வெளிப்பாடு தான் மரங்களின் வங்கி திட்டம் உருவாக காரணம்” என்கிறார் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அஜித். அவர் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: மாயம் அல்ல விவசாயம்: சுவரில் விளையும் காய்கறிகள், சூடுபிடிக்கும் செங்குத்து வேளாண்மை
தொடர்ந்து பேசிய அவர் “இதுவரை மூன்று லட்சம் மரங்கள் இந்த திட்டத்தின் கீழ் 19 வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதல் தவணையை பெற 157 விவசாயிகள் தகுதி பெற்றுள்ளனர். இந்த மரங்களை கண்காணிப்பதற்காக பிரத்யேக குழுவும் இயங்கி வருகிறது. அவர்கள் மரங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்குவார்கள். அதோடு மொபைல் போன் அப்ளிகேஷன் மூலமாகவும் இந்த மரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. பத்து ஆண்டுகள் ஒரு விவசாயி 100 மரங்களை இந்த திட்டத்தில் வளர்த்தால் அவருக்கு 50000 ரூபாய்கிடைக்கும். அதே நேரத்தில் அவர் ஒரே ஒரு மரத்தை வெட்டினாலும் கடன் தொகையை உடனடியாக கொடுத்தாக வேண்டும்” என்கிறார்.
“மரங்களை வெட்டாமல் பேணி வளர்க்க தூண்டும் இந்த திட்டத்தை நாம் பாராட்டியாக வேண்டும். இதன் மூலம் இந்த மரங்களை வளர்ப்பவர்களுக்கு நிதி ஆதாரமும் கிடைக்கிறது. இந்த மரங்களை விவசாயிகளுக்கு விளைச்சல் கொடுக்கும் மரங்களாக வளர்த்தால் நபார்டு வங்கியும் கடன் கொடுக்கும். இந்த திட்டம் பரிசோதனை ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம். இது ஆரம்பம் தான்” என்கிறார் முன்னாள் பஞ்சாயத்து குழு தலைவர் சுரேஷ்.
மரங்கள் மட்டுமல்லாது கார்பன் சமநிலையை கொண்டு வரும் முயற்சியாக குப்பை மேலாண்மை, அங்கக வேளாண்மைக்கு விவசாயிகளை ஊக்குவிப்பது, மின் சக்தி பயன்பாட்டை குறைக்கும் வகையில் LED பல்புகளை பயன்படுத்துவது மாதிரியான திட்டங்களும் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன.ALSO READ: 1 புகைப்படத்திற்கு 25 டாலர்! ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment