இந்தூர்: இந்தியாவில் கணவர் கொரோனாவால் இறந்ததால், அவரது உடலை தகனம் செய்யும் காட்சிகளை மனைவி சீனாவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்த்தார்.
பார்ப்பவர்கள் இதயம் நொறுங்கச் செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்த பலரும் ''எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது'' என்று தெரிவித்தனர்.
சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக மக்களின் நிம்மதியை இழக்கச் செய்து வருகிறது.
ஈவு இரக்கமில்லாமல் மனிதர்களின் உயிர்களை பறிக்கும் கொரோனா, மனிதர்களின் உணர்வுகளுடனும் தொடர்ந்து விளையாடி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது நடந்து பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
சீனாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியான மனோஜ் சர்மா. 40 வயதான இவர் சீனாவில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார். மனோஜ் சர்மா, உடல்நிலை சரியில்லாத உறவினரை கவனித்துக்கொள்வதற்காக மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு வந்தார். மனைவி சீனாவில் தங்கி இருக்க மனோஜ் சர்மா மட்டும் தொடர்ந்து இந்தூரில் இருந்து வந்தார்.
இதற்கிடையே மனோஜ் சர்மா கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்தூரின் ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்த மனோஜ் சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சீனாவில் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிலை காரணமாக அவர் உடனடியாக இந்தியாவுக்கு வர முடியவில்லை. இதனால் மனோஜ் சர்மா உடலை இந்தியாவில் தகனம் செய்ய அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சீனாவில் இருந்து ஆன்லைன் மூலம் இந்தூர் போலீசாருக்கு அனுமதி கடிதம் அனுப்பினார்.
மேலும், உயிருக்கு உயிரான கணவரின் உடலை நேரில் பார்க்கும் பாக்கியம்தான் கிடைக்கவில்லை. எனவே கணவரின் உடலை தகனம் செய்வதை ஆன்லைன் மூலம் நேரடியாக பார்க்க மனோஜ் சர்மாவின் மனைவி முடிவு செய்தார். உள்ளூர் சமூக சேவகர் யஷ் பராஷர் என்பவர் மனோஜ் சர்மாவின் உடலை தகனம் செய்தார். இதனை ஆன்லைன் வீடியோ கால் மூலம் பார்த்த மனோஜ் சர்மாவின் மனைவி கண்ணீர் விட்டார். பார்ப்பவர்கள் இதயம் நொறுங்கச் செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்த பலரும் எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று தெரிவித்தனர்.
Comments
Post a Comment