கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகம் என்பதும், அவர்களுக்கு பயங்கரமான நோய்கள் ஏற்படுவதும் ஆய்வில் தெரியவந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கொரோனாவின் கொடூரத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்த உயிர்க்கொல்லி வைரசால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டும், லட்சக்கணக்கானவர்கள் மீண்டும் வருகின்றனர்.
இந்த பயங்கர தொற்றில் இருந்து மீண்டவர்கள் பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அந்தவகையில் 87 ஆயிரம் கொரோனா நோயாளிகள் மற்றும் சுமார் 50 லட்சம் குணமடைந்தவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி முதலில் சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரசாக இருக்கும் இந்த கொரோனா பின்னாட்களில் உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் மிகத்தீவிர நோய்களை பின்னாட்களில் கொரோனா உருவாக்குகிறது. இதன் மூலம் உலக மக்களுக்கு வருகிற ஆண்டுகளில் மிகப்பெரும் சுமையை கொரோனா ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து மூத்த விஞ்ஞானி சியாத் அல்-அலி கூறியதாவது:-
நோய் தொற்றில் இருந்து குணமடைந்த 6 மாதங்கள் வரையிலான எங்கள் ஆய்வின்படி, கொரோனாவின் லேசான பாதிப்பை கொண்டிருந்தவர்களுக்கும் ஆபத்து அற்பமானது அல்ல என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக நோய் குணமடைந்த 30 நாட்களில் இருந்து 6 மாதங்கள் வரை, இவர்களுக்கான இறப்பு அபாயம் 60 சதவீதம் அதிகரிக்கிறது. அந்தவகையில் குணமடைந்த 1000 நோயாளிகளில் 6 மாதங்களில் 8 பேர் வரை மரணிக்கிறார்கள்.
தீவிர நோய்த்தொற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளிகள் 1000 பேரில் 29 பேர் அடுத்த 6 மாதங்களில் இறப்பை தழுவி இருக்கிறார்கள். நோய்த்தொற்றின் நீண்டகால சிக்கல்களால் இந்த பிற்கால மரணங்கள் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களாக பதிவு செய்யப்படவில்லை
எனவே கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கும்போது டாக்டர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் பலதரப்பட்ட சிகிச்சைகள் தேவைப்படும்.
இவ்வாறு சியாத் அல்-அலி தெரிவித்தார்.
Comments
Post a Comment