ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், அதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர், மும்பையில் உள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, எண்ணற்ற உத்தரவாத கடிதங்களை பெற்றார்.
அந்த கடிதங்களை பயன்படுத்தி, எந்த விதிமுறையும் இன்றி, வெளிநாட்டு வங்கிகளில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்றார். இதனால், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக வங்கி அளித்த புகாரின்பேரில், நிரவ் மோடி, அவருடைய உறவினரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்சி மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
அதற்குள் நிரவ் மோடி லண்டனுக்கு தப்பி விட்டார். அவரை தலைமறைவு குற்றவாளியாக சி.பி.ஐ. கோர்ட்டு அறிவித்தது. அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
சி.பி.ஐ. வேண்டுகோளின்பேரில் சர்வதேச போலீஸ் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். லண்டன் வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டன.
நிரவ் மோடி, வங்கி மோசடி வழக்குகளை சந்திப்பதற்காக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 2 ஆண்டு கால விசாரணைக்கு பிறகு, அவரை நாடு கடத்த கடந்த பிப்ரவரி 25-ந்தேதி நீதிபதி சாமுவேல் கூசி உத்தரவிட்டார்.
நாடு கடத்தும் வழக்குகளில், கோர்ட்டு தீர்ப்புக்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி ஒப்புதல் அளித்தால்தான் அதை அமல்படுத்த முடியும். சம்பந்தப்பட்ட குற்றவாளியை அனுப்பும் நாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதா என்பது உள்ளிட்ட அம்சங்களை உள்துறை மந்திரி ஆய்வு செய்வார். மரண தண்டனை விதிக்க வாய்ப்பு இல்லாவிட்டால், 2 மாதங்களுக்குள் அவர் ஒப்புதல் அளிப்பார்.
இந்த நடைமுறையின்படி, கடந்த பிப்ரவரி மாத இறுதியில், கோர்ட்டு தீர்ப்பு இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதை ஆய்வு செய்த உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல், நிரவ் மோடியை நாடு கடத்தும் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இந்த தகவலை நேற்று இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு முன்பு இன்னும் சில நடைமுறைகள் உள்ளன.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு விண்ணப்பிக்க அவருக்கு 14 நாட்கள் கால அவகாசம் உள்ளது. ஒருவேளை அவர் விண்ணப்பித்து, மேல்முறையீடு செய்ய அனுமதி கிடைத்தால், அவர் லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வார். அங்கும் அவரை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டால்தான், அவரை நாடு கடத்த வழி பிறக்கும்.
ஆனால், மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிப்பது பற்றி நிரவ் மோடி தரப்பு வக்கீல்கள் எதுவும் கூறவில்லை.
Comments
Post a Comment