123 நாட்கள் ஈருடல் ஓருயிராக வாழ்ந்த இவர்களது காதலும் ஒரு கட்டத்தில் கசந்து போனது. விலங்கை உடைத்து பிணைப்பில் இருந்து விலகுவது என இருவரும் இணைந்தே முடிவெடுத்தனர்.
பிரியவே கூடாது என்று தங்களை விலங்கிட்டு பிணைத்துக் கொண்ட காதல் ஜோடி 123 நாட்களுக்குப் பின் பிரிந்த சம்பவம் உக்ரேனில் நடந்துள்ளது.
உக்ரேனின் கார்கிவ் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் குட்லே (Alexandr Kudlay). கார் விற்பனையாளரான இவருக்கும், ஒப்பனைக் கலைஞரான விக்டோரியா புஸ்டோவிடாவாவுக்கும் (Viktoria Pustovitova) காதல் மலர்ந்தது. சராசரி காதல் ஜோடிகளைப் போல் அல்லாமல் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்று இருவரும் முடிவெடுத்தனர். வேறு எவராலும் அல்ல; நம்மால் கூட நம்மைப் பிரிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த இருவரும் ஒரு வினோத யோசனையை செயல்படுத்தினர். காதலர் தினத்தன்று அலெக்ஸாண்டரின் வலக்கை மற்றும் விக்டோரியாவின் இடக்கையை இணைத்து கைவிலங்கிட்டுக் கொண்டனர்.
கால்கட்டுப் போடும் நேரத்தில் கைவிலங்கிட்டுக் கொண்டவர்களின் செயல் உலகெங்கும் உள்ள காதல் நெஞ்சங்களை கசிந்துருகச் செய்தது. அதன் பின்னர் எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றனர். ஒருவர் ஷூலேஸ் கட்ட வேண்டுமென்றால் இன்னொருவர் உதவ வேண்டும். ஒருவர் செல்ஃபோனைப் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஸ்க்ரோல் செய்ய வேண்டும்.
இப்படி 123 நாட்கள் ஈருடல் ஓருயிராக வாழ்ந்த இவர்களது காதலும் ஒரு கட்டத்தில் கசந்து போனது. விலங்கை உடைத்து பிணைப்பில் இருந்து விலகுவது என இருவரும் இணைந்தே முடிவெடுத்தனர். இதுகுறித்து கூறிய விக்டோரியா, 24 மணி நேரமும் கூடவே இருந்ததால், அலெக்ஸாண்டரின் கவனம் தன் மீது இல்லை என்றும், அவர் மிஸ் யூ என்னும் வார்த்தையை தன்னிடம் சொல்லவே இல்லை என்றும் கூறியுள்ளார். அலெக்ஸாண்டரோ தாங்கள் ஒரே மாதிரியான விருப்பு, வெறுப்பு கொண்டவர்கள் இல்லை என்றும், தங்களுக்குள் ஒரே அலைவரிசை இல்லை என்றும் பிரிவுக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
தங்களைப் பிணைத்து வைத்திருந்த காதல் காணாமல் போன நிலையில், உடைக்கப்பட்ட கைவிலங்கை ஏலம் விடப் போவதாகவும், அதில் வரும் தொகையில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு தரவிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர் இந்த உலகப்புகழ் காதல் ஜோடிகள்.
விலங்கே போட்டாலும் விலகும் உறவை பிணைக்க முடியாது என சொல்லாமல் சொல்லியிருக்கின்றனர் இந்த முன்னாள் காதலர்கள்.
Comments
Post a Comment