பெரியவர்களால்தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும் என்றில்லை. பெரியவர்களும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
பெற்றோர் தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்களாக விளங்குகிறார்கள். வாழ்க்கைக்கு தேவையான முக்கிய விஷயங்களை பெற்றோரிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் தாங்கள் கற்றறிந்த அனுபவ பாடங்கள் மூலம் பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறார்கள்.
பெரியவர்களால்தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும் என்றில்லை. பெரியவர்களும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் மாற்றக்கூடிய குணங்களை குழந்தைகள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் தாங்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களிடம் எப்போதும் சுறுசுறுப்பு மிகுந்திருக்கும். வேடிக்கையான சுபாவத்தையும் கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் அப்படி இருப்பதில்லை. தாங்கள் விரும்பிய விஷயங்களை அரிதாகவே செய்வார்கள். ஏதாவதொரு நிர்பந்தத்திற்கு ஆளாகி, கட்டாயத்தின் பெயரில் செய்து முடிக்கவேண்டிய நிலையில் இருப்பார்கள். அது நெருக்கடிக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கும். அதற்கு இடம்கொடுக்காமல் குழந்தைகளை போல விரும்பிய விஷயங்களை செய்வதற்கு பெரியவர்கள் முயற்சிக்க வேண்டும்.
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ? என்ன நினைப்பார்களோ? என்று குழந்தைகள் கவலைப்படுவதில்லை. ஆனால் பெரியவர்கள் அடுத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் தங்கள் காரியங்களை செய்வார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்களின் விருப்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவர் களின் ஆலோசனைப்படியே செயல்படுவார்கள். குழந்தைகள் அதற்கு இடம் கொடுப்பதில்லை. தாங்கள் விரும்பியபடியே செய்து முடித்து மன நிறைவு அடைவார்கள்.
குழந்தைகளிடம் நேர்மை குடிகொண்டிருக்கும். அவர்களுடைய மனம் குழப்பமின்றி தெளிவாகவும் இருக்கும். அவர் களிடம் ஏதேனும் கேள்வி கேட்டால் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்வார்கள். அந்த பதில் நேர்மையாகவும், சரியாகவும் இருக்கும். அவர்களை போல வாழ்க்கையில் கொஞ்சம் நேர்மையாக இருக்க பெரியவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
பெரியவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களிடம் மகிழ்ச்சி தொலைந்து போயிருக்கும். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னகையை உதிர்ப்பார்கள். குழந்தைகளின் உள்ளமும், முகமும் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொண்டிருக்கும்.
குழந்தைகள் எளிதில் திருப்தி அடைந்துவிடுவார்கள். சின்ன சின்ன விஷயங்களில் கூட மகிழ்ச்சியும், மன நிறைவும் கொள்வார்கள். ஆனால் பெரியவர்கள் நிறைய பேரிடம் எப்போதும் எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஒரு காரியத்தை செய்து முடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் கூட, இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று எளிதில் மன திருப்தி அடையமாட்டார்கள். தங்களிடம் இருக்கும் திறமையையும் உணர மாட்டார்கள்.
குழந்தைகள் புதிதாக ஏதேனும் ஒன்றை காணும்போதெல்லாம் அதனை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள். அதுபற்றி அறிந்து கொள்ளும் வரை ஓயமாட்டார்கள். அறியும் வரை உற்சாகத்துடன் செயல்படவும் செய்வார்கள். பெரியவர்கள் எந்தவொரு வேலையையும் ஆர்வமாக தொடங்குவார்கள். ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் மெல்ல மெல்ல குறைய தொடங்கிவிடும்.
குழந்தைகள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறார்கள். அவர்களிடம் எதிர்காலம் பற்றிய கவலை எட்டிப்பார்ப்பதில்லை. ஆனால் பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்து நிகழ்காலத்தை வீணடிக்கிறார்கள். வாழ்க்கையில் கடந்து போகும் தருணங்கள் எதுவும் திரும்ப வராது என்பதை புரிந்து கொள்ள பெரியவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
Comments
Post a Comment