உலகளவில் கடந்த 100 ஆண்டுகளில் அதிகளவில் நன்கொடை செய்தவர்கள் யார்..? என்பது குறித்து ஈடெல்கிவ் பவுண்டேஷன் மற்றும் ஹூரன் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியாகும் போது வழக்கம் போல் யாரேனும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் முதல் இடத்தைப் பிடித்திருப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் முதல் இடத்தைப் பிடித்தது ஒரு இந்தியர் என்பது தான் வியக்கவைக்கும் உண்மை.
100 ஆண்டுகளில் மாபெரும் நன்கொடையாளர்
100 ஆண்டுகள் என்பதால் உலகளவில் பல வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களின் தலைவர்கள், ராஜ குடும்பத்தினர், பணக்காரர் குடும்பங்கள் என உலகம் முழுவதும் பல லட்சம் பேர் இருந்திருப்பார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அன்றைய அமெரிக்காவின் ராக்பெல்லர் முதல் இன்றைய பில் கேட்ஸ் வரையில் பலர் உள்ளனர்.
ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா
ஆனால் அனைவரையும் ஓரம் கட்டி உலகளவில் கடந்த 100 ஆண்டுகளில் அதிகளவில் நன்கொடை செய்தவர்களில் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ஒரு இந்தியர். ஆம் இந்தியாவின் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தை உருவாக்கிய ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
102.4 பில்லியன் டாலர் நன்கொடை
கடந்த 100 வருடத்தில் ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா சுமார் 102.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு நன்கொடை அளித்துள்ளார். இதன் மூலம் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் டாடா, இது டாடா குடும்பம், டாடா குழுமம் ஆகியவற்றைத் தாண்டி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயமாக உள்ளது.
கல்வி மற்றும் சுகாதாரத் துறை
ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா தனது பெரும்பாலான நன்கொடை உதவிகளைக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்குத் தான் செய்துள்ளார். அனைவருக்கும் முன்னோடியாக இந்தியர்களுக்குக் கல்வி மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா கல்வி துறையில் அதிகளவில் நன்கொடை கொடுத்துள்ளார்.
1892ஆம் ஆண்டு முதல் நன்கொடை
தனது சொத்தின் பெரும் பகுதியை ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா நன்கொடைக்காகப் பயன்படுத்தியுள்ளார். ஜாம்செட்ஜி டாடா 1892ஆம் ஆண்டு முதல் பல்வேறு நன்கொடைகளைச் செய்து வருகிறார். இந்த 102.4 பில்லியன் டாலர் கணக்கீடு என்பது டாடா டிரஸ்ட் பட்டியலிட்டு உள்ள நன்கொடைகள் மட்டுமே, பதிவு செய்யப்படாமல் இருக்கும் உதவிகள் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
100 ஆண்டுகளில் அதிகளவில் நன்கொடை செய்தவர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா முதல் இடத்தைப் பிடித்த நிலையில் 12வது இடத்தை மற்றொரு இந்தியரான விப்ரோ குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆசிம் பிரேம்ஜி பிடித்துள்ளார்.
ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா (டாடா குழுமம்) - 102.4 பில்லியன் டாலர்
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் (மைக்ரோசாப்ட்) - 74.6 பில்லியன் டாலர்
ஹென்றி வெல்கம் (வெல்கம்) - 56.7 பில்லியன் டாலர்
ஹோவர்ட் ஹக்ஸ் (ஹக்ஸ் ஏர்கிராப்ட்) - 38.6 பில்லியன் டாலர்
வாரன் பபெட் (Berkshire Hathaway) - 37.4 பில்லியன் டாலர்
ஜார்ஜ் சோர்ஸ் (சோரஸ் பண்ட்) - 34.8 பில்லியன் டாலர்
ஹான்ஸ் வில்ட்ரோஃப் (ரோலெக்ஸ்) - 31.5 பில்லியன் டாலர்
ஜேகே லில்லி (எலி லில்லி & கம்பெனி) - 27.5 பில்லியன் டாலர்
ஜான் டி ராக்பெல்லர் (ஸ்டாண்டர்ட் ஆயில்) - 26.8 பில்லியன் டாலர்
எட்செல் போர்ட் (போர்டு மோட்டார் கம்பெனி) - 26.7 பில்லியன் டாலர்.
Comments
Post a Comment