துபாயில் சமீப காலமாக அழகு நிலையங்களில் நகங்களின் மீது நெயில் பாலீஷ் உதவியுடன் ஒளித்து வைக்கப்படும் மைக்ரோ சிப் பிரபலமடைந்து வருகிறது.
துபாய் அழகு நிலையம் ஒன்றில் பெண் ஒருவரின் விரல் நகத்தில் மைக்ரோசிப் பதித்து வைக்கும் காட்சியை படத்தில் காணலாம்.
துபாய்:
ஆங்கிலத்தில் நியர் பீல்டு கம்யூனிகேசன் டெக்னாலஜி என்பதன் சுருக்கம் என்.எப்.சி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது வெளிவரும் புதிய ரக ஸ்மார்ட் போன்களில் இந்த தொழில்நுட்பம் இருப்பதை காணலாம்.
பொதுவாக தகவல்களை ஒரு ஸ்மார்ட் போனிலிருந்து மற்றொரு போனுக்கு பரிமாற்றி கொள்ள இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. என்.எப்.சி.யை பொறுத்தவரையில் உணரும் கருவி அல்லது செல்போனை பக்கத்தில் வைத்தாலே போதும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். உதாரணமாக கடைகளில் ஸ்மார்ட் போனில் பணம் செலுத்த இந்த முறையை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்காலத்தில் டிக்கெட் முன்பதிவு, வருகை பதிவேடு, பாதுகாப்பாக கணினியின் உள்ளே நுழைவதற்கு என்று பல வகைகளில் என்.எப்.சி. தொழில்நுட்பம் பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தற்போது விரல் நகங்களில் பதித்து வைத்துக்கொள்ளும் அளவில் மிகச்சிறிய மைக்ரோ சிப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ சிப் தற்போது துபாயில் உள்ள அழகு நிலையங்களில் நெயில் பாலீஷ் மூலம் நகத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்துவோர் தங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக பெயர், முகவரி, செல்போன் எண், இ-மெயில், இணையதள முகவரி, சமூக ஊடக முகவரி என சிறிய அளவிலான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.
விரல் நகத்தில் ஒட்ட வைத்து நெயில் பாலீஷ் பூசப்படுகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது சாதாரண நகமாக தெரியும். இதனை விசிட்டிங் கார்டுக்கு பதிலாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிப்பை என்.எப்.சி. தொழில்நுட்பம் உடைய எந்த கருவி அருகில் கொண்டு சென்றாலும் தகவல் பரிமாறப்பட்டு விடும்.
கொரோனா பரவல் காலத்தில் தொலைதூர தகவல் தொடர்பு முறையில் இந்த மைக்ரோ சிப் பயனுள்ளதாக உள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அழகு நிலையங்களில் நகத்தில் பதிக்கும் இந்த புதிய வகை மைக்ரோசிப் பிரபலமடைந்து வருகிறது.
Comments
Post a Comment