உலகில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அத்தகைய ஆரோக்கியமான வாழ்வை அளிக்கவல்ல சக்தி யோகா கலைக்கு உள்ளது.
இன்று (திங்கட்கிழமை) உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யோகா கலை தோன்றியது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து வடிவம் கொடுத்து, யோக சூத்திரங்களை அமைத்து, அதற்கு உயிரூட்டி, அதை நிலை பெறச் செய்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார். அதனால்தான் அவரை யோகா கலையின் தந்தை எனவும், அவர் கொடுத்த யோகா கலையை பதஞ்சலி யோகா என்றும் அழைக்கின்றோம்.
யோகா என்னும் வடமொழி சொல்லுக்கு இணைத்தல் அல்லது ஒன்று சேர்தல் என்பது பொருள் ஆகும். உடலோடு மனதை ஒன்றிணைத்து, உயிர்சக்தியை அறிந்து வாழ்வியல் முறையை மேம்பட செய்வதே யோகா கலை.
இத்தகைய சிறப்புமிக்க யோகா கலையின் பயன்கள் குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை சிகிச்சை பிரிவு உதவி மருத்துவ அலுவலர் எ.ஜெ.கல்யாணி கூறியதாவது:-
மனிதனின் உடலை இயங்க உயிர்சக்தி அவசியம். அந்த உயிர்சக்தி தங்கும் இடமாக நம் உடலமைப்பு உள்ளது. நம் உடல் ஆகாயம், காற்று, நீர், நிலம், நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் ஆனது. நிலம் உடலையும், ரத்தம் நீரையும், பிராணவாயு காற்றையும், உடல் வெப்பம் நெருப்பையும், ஆகாயம் வெற்றிடத்தையும் உடலில் குறிக்கின்றது. இந்த பஞ்ச பூதங்களில் காற்று, நெருப்பு, நீர் ஆகிய மூன்றும் பருபொருளான உடலை, நுண்பொருளான உயிர் சக்தியோடு இணைத்து, நட்போடு இயங்க செய்கிறது. இந்த மூன்றின் செயல்பாட்டில் ஒன்று கூடினாலும், குறைந்தாலும் உடலில் உயிர்சக்தி குறையும். அதனால் வாதம், பித்தம், கபம் போன்ற நோய்கள் ஏற்படும்.
யோகாவில், அஷ்டாங்க யோகா, ஹத யோகா என்னும் 2 வகை உள்ளது. இதில் ஹத யோகா, கொரோனா தொற்று மட்டுமல்லாது அனைத்து வகை கிருமித்தொற்றையும் அழித்து உடலை சுத்தப்படுத்தி உயிராற்றலை தியானத்தின் வழியாக அதிகப்படுத்த செய்கிறது.
தடாசனம் செய்வதால் நுரையீரல் நன்கு விரிவடைந்து மூச்சுக்காற்று அதிகமாக உட்செல்லும். மார்பு, தொடை, குதிங்கால் தசைகள் வலுப்பெறும். மக்கராசனம் செய்வதால் மனதை அமைதிப்படுத்தி சுவாசம் ஒரே சீராக சிரமமின்றி செல்லும். இது கொரோனா நோயாளிகளுக்கு உகந்த பயிற்சி. பிராமரி பிராணாயாமம் செய்வதால் மூச்சை ஒழுங்குபடுத்துவதுடன் மேலும் சில நன்மைகள் கிடைக்கும்.
நமது உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதே முத்திரையாகும். இதில் லிங்க முத்திரை செய்வதால் வறட்டு இருமல் நீங்கும். கபம் அகலும். நீர்கட்டு பிரச்சினைகள், ஜலதோஷம், ஆஸ்துமா சரியாகும்.
கிரியா செய்வதால் பஞ்சபூதங்களில் இருந்து தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொண்டு தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். ஜலநேத்தியில் மூக்கை சுத்தப்படுத்தும் முறை உள்ளது. இதை செய்வதால் சளி வெளியேறும். கொரோனா வைரஸ் கிருமி மூக்கின் உள்ளே செல்வதை தடுக்க முடியும்.
பொதுவாக யோகாசனம் செய்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகும். நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு சீராகும். நினைவாற்றல் அதிகரிக்கும். இன்னும் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment