குடும்பத்தின் ஒட்டுமொத்த தகவல்களும், வங்கி கணக்கு விவரங்களும், பணம்கொடுக்கல்- வாங்கல் ரகசியங்கள் போன்ற அனைத்தும் ‘ஸ்மார்ட்’ போன்களில் பாதுகாக்கப்படுகிறது. வீட்டில் ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படவேண்டிய அனைத்தையும், செல்போனில் பதிவேற்றிவைத்துக்கொண்டு, அந்த கஜானாவை கையிலே கண்ட இடங்களுக்கு எல்லாம் தூக்கிச்சென்று கொண்டிருக்கிறோம்.
அந்த போன் காணாமல் போய்விட்டால் பலரது வாழ்க் கையே தடம்புரண்டு போய்விடும். அந்த அளவுக்கு அதில் உறவுக்கு உலைவைக்கும் படங்களும், தகவல்களும்கூட இருந்துகொண்டிருக்கின்றன. முன்பு பணம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. இப்போது செல்போன் இல்லாமல்தான் வெளியே போகமுடியாது. கடைகளில் பொருட்கள் வாங்கவும், பயணம் செய்யவும், கட்டணங்கள் செலுத்தவும் போன் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது.
சொத்து விவரங்களையும், முக்கியமான பாஸ்வேர்டுகளையும், ஏ.டி.எம். பின் விவரங்களையும் அதில்தான் சேகரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் மனதுக்குள் பாதுகாக்கவேண்டிய ரகசியங்களையும், இதர தொடர்புகளுக்கான ஆதாரங்களையும் போனுக்குள்தான் பதுக்கிவைத்திருக்கிறார்கள். வீடுகளில் இரும்பு அலமாரிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் பொன், பொருள், பணத்தை களவாட கொள்ளையர்கள் இருப்பதுபோல், நமது செல்போன்களில் இருக்கும் அனைத்து தகவல்களையும் திருடி விலைபேசி விற்பதற்கும் பலர் இருக்கிறார்கள். அந்த சந்தைக்கு ‘டார்க் மார்க்கெட்’ என்று பெயர். அதற்கான குழுக்கள் உலகளாவிய நிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த சைபர் கொள்ளையர்கள் உலக அளவில் நெட்ஒர்க் அமைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிகமான அளவு மக்கள் பயன்படுத்தும் வகையிலான ‘ஆப்’களை உருவாக்க பல்வேறு நிறுவனங் கள் போட்டிபோடுகின்றன. அவர்களுக்கு அதற் கான புள்ளிவிபரங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு ‘மக்கள் எதற்காக அதிக அளவில் போன்களை பயன்படுத்துகிறார்கள்? எத்தகைய பொருட்களை வாங்குகிறார்கள்? அவர்களது பொருளாதார நிலை என்ன?’ என்பன போன்ற ஏராளமான தகவல்கள் தேவைப்படுகின்றன. நமது போனில் இருந்து நமது சொந்த தகவல்களை நமக்கு தெரியாமலே திருடி, தேவைப்படுபவர்களுக்கு விற்பதுதான், டார்க் மார்க்கெட் சைபர் குற்றவாளிகளின் வேலை. நமது நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள், ‘மற்றவர்கள் போட்டி போட்டு வாங்கும் அளவுக்கு நாம் எந்த விவரத்தையும் போனில் சேகரித்து வைத்திருக்கவில்லையே?’ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் போஸ்ட் செய்த தகவல்களோ, நீங்கள் விமர்சனம் செய்த தகவல்களோ அவர்களுக்கு தேவையில்லை. உங்கள் தேவைகள், பயணங்கள், நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி, மதம், வாழ்க்கைமுறை, முன்பு உங்கள் பொருளாதார நிலை- இன்றைய பொருளாதார நிலை, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், வாங்கும் பொருட்கள்- விற்கும் பொருட்கள், சேமிப்புகள் போன்ற எல்லா தகவல்களும் தேவைப்படுகின்றன. புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு அந்த தகவல்களை கொடுப்பார்கள். அதை அடிப்படையாகவைத்து அவர்கள் தங்கள் மார்க்கெட்டிங் உத்திகளை வகுப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே கால்பதிக்கும்போது அவர்களுக்கு இந்த புள்ளிவிபரங்கள் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கும். அரசியல் கட்சிகளும் எந்த கட்சிக்கு எந்த பகுதியில் எவ்வளவு செல்வாக்கு
இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள, திருட்டு தகவல்களை பெறுவதுண்டு.
செல்போன்களில் கோளாறு ஏற்பட்டால் அதனை சர்வீஸ் செய்வதற்காக வழங்குவோம். அதிலும் கவனம் தேவை. அதில் இருக்கும் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள், பின் நம்பர்கள், போட்டோக்கள் போன்றவைகளை லிங்க் செய்திருக்கும் ஆப்களை உளவுபார்த்து திருடும் வேலையில் சர்வீஸ் செய்பவர்கள் ஈடுபடலாம். அதனால் சிம், மெமரி கார்டு போன்றவைகளை எடுத்துவிட்டே சர்வீஸ்க்கு கொடுக்கவேண்டும். போனில் இருக்கும் வீடியோக்கள், பைல்கள் போன்றவைகளை மெமரி கார்டுக்கு மாற்றிவிடவேண்டும். போன் மெமரியில் உள்ள பைல்களை டெலிட் செய் தால் ரிக்கவரி சாப்ட்வேர் பயன்படுத்தி அவைகளை மீண்டும் எடுத்துவிட அந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் முடியும்.
மெமரி கார்டில் உள்ளவைகளை டெலிட் செய்தாலும் திரும்பி எடுக்க முடியும். அதனால் மெமரி கார்டுகளை யாரையும் நம்பி கொடுக்காதீர்கள். அதிக நேரம் உங்கள் செல்போன் அடுத்தவர்கள் கையில் இருப்பதும் ஆபத்துதான்.உங்கள் வீட்டிற்குள் உங்கள் அனுமதியின்றி யாராலும் வர முடியாது. நீங்கள் முக்கியமான பொருட்களை பாதுகாக்கும் அலமாரியையும் உங்கள் அனுமதியின்றி யாராலும் திறக்க முடியாது. ஆனால் நீங்கள் அனைத்து தகவல்களையும் சேகரித்துவைத்திருக்கும் செல்போனை யாரோ ஒருவரால் உங்கள் அனுமதியில்லாமலே திறந்து, அதில் இருக்கும் தகவல்களை எல்லாம் திருடி தேவைப்படுகிறவர்களுக்கு விற்க வாய்ப்பிருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து உங்கள் கையோடு கொண்டு செல்லும் கஜானா போன்ற செல்போனை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
Comments
Post a Comment